3976. | ஆற்றாது, பின்னும் பகர்வான், 'அறத்தாறு அழுங்கத் தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விது அன்றால்; மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான், வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? வீர!' என்றான். |
ஆற்றாது பின்னும் பகர்வான் - (இலக்குவன்) மனம் பொறுக்காமல் மேலும் கூறுவானாய்; வீர - 'பெரு வீரனே!அறத்து ஆறு அழுங்க - தரும நெறி கெட; தேற்றாது செய்வார்களை - தெளிவு பெறாது தீய காரியங்களைச் செய்பவர்களை; தேறுதல் செவ்விது அன்று - நம்புதல் நன்மை தருவதாகாது; தம் முனை - தன் தமையனையே; மாற்றான் என - பகைவன் என்று கொண்டு; கொல்லிய வந்து நின்றான்- கொல்லும் பொருட்டு வந்து நின்றுள்ள சுக்கிரீவன்; வேற்றார்கள் திறத்து - (உறவினரல்லாத) அயலால் திறத்தே; இவன் தஞ்சம் என் - உற்ற துணையாதல் எவ்வாறு?'என்றான் - என்று கேட்டான். தமையனையே கொல்லத் துணிந்தவன், உறவல்லாத அயலார்க்கு எங்ஙனம் துணையாவான் என்பதாலும், நமபிக்கைக்கு மாறான செயலைத் தன் தமையனுக்குச் செய்பவன் பிறர்க்கு நல்லது செய்யான் என்பதாலும் சுக்கிரீவனை நம்பக்கூடாது என்பது இலக்குவன் கருத்தாகும். 'ஆற்றாது' என்னும் சொல் இலக்குவனது சகோதர பாசத்தையும், நேர்மையான போர்நெறியினையும் உணர்த்தும். அறத்தை நிலை நாட்டும் வீர நெறியையே இராமன் பின்பற்றுவான் ஆதலின் அவனை 'வீர' என விளித்தான். கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவனாகிய உனக்கு இப்படி ஒரு துணை வேண்டுமா என்ற கருத்தொரு 'வீர' என விளித்தான் என்றும் கொள்ளலாம். முனை - முன்னை என்பதின் இடைக்குறை. கொல்லிய - எதிர்கால வினையெச்சம். 42 |