இராமன் மறுமொழி 3977. | 'அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், 'இப் பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ? எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ? |
அத்தா - 'ஐயனே!இது கேள் என - இதனைக் கேட்பாயாக' என்று; ஆரியன் கூறுவான் - மேலோனாகிய இராமன் (இலக்குவனை நோக்கி) பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்; பித்து ஆய இவ் விலங்கின் - (மக்கள் ஒழுக்கம் குறித்துப் பேசுவது போல) பைத்தியம் கொண்டது போன்ற விவேகமில்லாத இவ்விலங்குகளின்; ஒழுக்கினைப் பேசலாமோ - ஒழுக்க முறையை ஒரு பொருட்டாகப் பேசலாகுமா?எத்தாயர் வயிற்றினும் - (விலங்கினம் சார்ந்த சுக்கிரீவன் கிடக்க. மனிதரான உடன் பிறந்தாருள்ளும்) எத்தகைய தாயார் வயிற்றிலும்; பின் பிறந்தார்கள் எல்லாம் - பின்னர்ப் பிறந்த தம்பியரெல்லாம்; ஒத்தால் - (தம் தமையன் மாரிடத்து அன்பும் பணிவும் கொள்வதில்) ஒரே மாதிரியானவராக நடப்பராயின்; பரதன் பெரிது உத்தமன் - பரதன் தன் உயர் குணங்களால் மிக உயர்ந்தவன் என்று; ஆதல் உண்டோ - போற்றப்படுதல் உளதாகுமோ? அத்தன் - தந்தை. இராமன் அன்புமிகுதியால் தம்பியை 'அத்தா' என அழைத்தான். 'என் அத்த, என் நீ இமையோரை முனிந்திலாதாய்' (1727) என இலக்குவனை முன்னரும் விளித்தனை காண்க. ஐம்பொறிகளின் வழியே மயங்கித் திரியும் பகுத்தறிவில்லாத விலங்கினங்களின் ஒழுக்க முறையை மக்கள் நெறிபோலப் பேசுதல் பொருந்தாது என்னும் கருத்தால் 'இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசுலாமோ?' என்றான். பகுத்துணரும் அறிவினை உடைய மனிதரிலும் எல்லாத் தம்பியரும் ஒரு நிகரினராக நடந்திருப்பாராயின் பரதன் மட்டும் யாவரினும் மேம்பட்டவன் என்ற சிறப்பை அடைந்திருக்க முடியாது என்பானாய்ப் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?' என்றான். விலங்கு இயல்பாகிய பண்பாட்டுக் குறைவைத்தான் இராமன் குறித்தான் என்க. தன்னையே பின் தொடர்ந்து வரும் இலக்குவனிடமே இராமன் பரதனைப் புகழ்ந்து பேசுகிறான். இராமன் மீது கொண்ட பேரன்பால் இலக்குவன் தவறு செய்த இடங்கள் உண்டு. இராமனைக் காணவந்த பரதன்மீது ஐயுற்றான் இலக்குவன். இங்கும் சரணடைந்த தம்பியைக் கொல்லவந்தவனும், தம்பி மனைவியைக் கவர்ந்தவனுமாகிய வாலியைக் கொல்வது அறம் என இராமன் நினைக்க, இலக்குவன் வேறு பார்வையில் காண்கிறான். ஆனால், பரதன் என்றும் அறநிலையிலிருந்து மாறாது தமையனுக்காக வாழ்ந்து வருவதால் 'பரதனை'ப் புகழ்ந்தான் இராமன் எனலாம். 'ஆயிரம் இராமன் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா' (2337) எனப் பாராட்டினான் குகன். கோசலை, வசிட்டர் பலர் பரதனைப் பாராட்டுகின்றனர். இதனால் இலக்குவனை இராமன் குறைத்து மதிப்பிட்டான் என்பது பொருளன்று. 'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே'' (8646) என்ற இடம் இராமன் இலக்குவன் மாட்டுக் கொண்ட அன்பைப் புலப்படுத்தும். ஆரியன் - தீவினைகளிலிருந்து சேய்மையாய் விலகிச் செல்பவன் என்பது பொருள். பரதன் - எல்லாச் சுமைகளையும் நிர்வகிக்க வல்லவன், எனப் பொருள்படும். இப்பாடலால் பரதன் இராமன் வாக்கால் உடன்பிறந்தாருள் 'பெரிதும் உத்தமன்' என்று பாராட்டப் பெற்றமை குறிக்கத்தக்கது. 'துஞ்சா விரதம் தனைக் கொண்டு மெய்யன்பு பூண்ட, பரதனையும் ராமனையும் பார்' என்ற வரதுங்க பாண்டியரின் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 43 |