3978.'வில் தாங்கு வெற்பு அன்ன
      விலங்கு எழில் தோள! ''மெய்யம்மை
உற்றார் சிலர்; அல்லவரே
      பலர்'' என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன்
      பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நவை என்றலுக்கு
      ஆகுநர், ஆர்கொல்?' என்றான்.

     வில் தாங்கு வெற்பு அன்ன- வில்லை ஏந்திய மலையை ஒத்து;
விலங்கு எழில்தோள -
விளங்குகின்ற ஆழகமைந்த தோள்களை
உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் - (இவ்வுலகில்) தவறாத
நல்லொழுப்பம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்; அல்லவரே பலர் - அந்
நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்; என்பது உண்மை -
என்பதுதான் உண்மையாகும்.  பெற்றார் உழை - நம்மை நண்பராகப்
பெற்றவரிடத்தில்; பெற்ற பயன் - பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல
பலனை; பெறும் பெற்றி அல்லால் - பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்;
நவை அற்றார் என்றலுக்கு -
குற்றமற்றவர் என்று சொல்வதற்கு; ஆகுநர்
ஆர்கொல் -
உரியவர் யாருளர்?' என்றான் - என்று (இராமன்) கூறினான்.

     உலகில் நல்லொழுக்கம் உடையார் சிலராகவும், அவ்வொழுக்கம்
இல்லாதார் பலராகவும் இருப்பதால் நாம் நண்பர்களிடத்து உள்ள குறைகளை
நோக்காது குணங்களை ஏற்றுக்கொண்டு பயன் அடைய வேண்டும் என்பது
இராமனின் அறிவுரையாகும்.  'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற
பழமொழியினையும் 'நல்லார் எனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை, அல்லால்
எனினும் அடக்கிக் கொளல் வேண்டும், நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு
நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு' (நாலடி - 221) 'குணம் நாடிக் குற்றமும்
நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' (குறள் - 504); என்பனவற்றையும்
காண்க.

     வில்தாங்கு - வெற்பு - இல்பொருள் உவமை; ஆகுநல்; 'ந' - பெயரிடை
நிலை.  முன் இரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி. பின்
இரண்டடிகளில், பொதுவாகக் கூறிய கருத்து, சுக்கிரீவன் குற்றம்
உடையவனாயினும் அவன் மாட்டுள்ள நற்குணத்தால் பெறக் கூடிய பயனைப்
பெறுவதே செய்ய வேண்டுவது என்ற சிறப்புப் பொருளைத் தெரிவிப்பதால்
பிறிதுமொழிதல் அணியாம்.                                             44