வாலி - சுக்கிரீவன் போர் 3979. | வீரத் திறலோர், இவை இன்ன விளம்பும் வேலை, தேரில் திரிவான் மகன், இந்திரன் செம்மல், என்று இப் பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார், மூரித் திசை யானை இரண்டு என, முட்டினாரே. |
வீரத் திறலோர் - வீரமும் போர்த்திறமும் வாய்ந்த இராலக்குவர்; இன்ன இவை விளம்பும் வேலை - இத்தன்மையனவான சொற்களைப் பேசிக்கொண்டிருக்கையில்; தேரில் திரிவான் மகன் - தேர் மீதேறி வானம் எங்கும் சுற்றித் திரிபவனான சூரியன் மகனான சுக்கிரீவன்; இந்திரன் செம்மல்- இந்திரன் மகனான வாலி; என்று - எனக் கூறப்பெற்று; இப் பாரில் திரியும்- இந்த உலகில் சுற்றித் திரியும்; பனிமால் வரை அன்ன - குளிர்ந்த பெரியமலை போன்ற; பண்பார் - தன்மையினராய (சகோதரர்கள்); மூரித்திசையானை இரண்டு என - வலிமை மிக்க திசை யானைகள் இரண்டு எதிர்த்தாற்போல; முட்டினார் - ஒருவரோடொருவர் மோதிப் போர் புரிந்தனர். மலைபோல் பெருந்தோற்றமுடைய வாலி சுக்கிரீவர் திசை யானைகள் இரண்டு மோதிக் கொண்டது போல் மோதிக் கொண்டனர். மலையும், திசை யானைகளும் உவமை. தேரில் திரிவான் மகன் - சுக்கிரீவன், இந்திரன் செம்மல் - வாலி. இருவரும் வெண்ணிற மேனியராதலின் 'பனி மால் வரை அன்ன பண்பார்' என்றார். பாரில் திரியும் பனிமலை இருப்பின் அதை போன்ற பண்பார் என்பதில் இல்பொருள்உவமை. 45 |