3980. | குன்றோடு குன்று ஒத்தனர்; கோள் அரிக் கொற்ற வல் ஏறு ஒன்றோடு சென்று, ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார்; நின்றார்; திரிந்தார் நெடுஞ் சாரி; நிலம் திரிந்த, வன் தோள் குயவன் திரி மட்கலத்து ஆழி என்ன, |
குன்றோடு குன்று ஒத்தனர் - (வாலி சுக்கிரீவராகிய) அவ்விரு வரும்) மலையோடு மலை (மோதினால்) போன்று ஒத்துப் போரிட்டனர்; கோள் அரிக்கொற்ற வல் ஏறு - உயிர்கொள்ள வல்ல திண்மையும் வெற்றியும் வாய்ந்த வலிய ஆண் சிங்கம்; ஒன்றோடு சென்று ஒன்று எதிர் - ஒன்றோடொன்று நேராகப் போய் எதிர்த்து; உற்றனவேயும் ஒத்தார் - பொருதனவற்றையும் ஒத்து விளங்கினார்கள்; நின்றார் - போர்செய்ய நெருங்கி நின்றனர். நெடுஞ்சாரி திரிந்தார் - நெடுநேரம் வலமுறை, இடமுறையாகச் சுற்றித் திரிந்தார்கள்; நிலம் - (அதனால்) நிலவுலகம்; வன்தோள் குயவன் - வலிய தோள்களை உடைய குயவன்; திரிமட்கலத்து ஆழி என்ன - சுற்றி விட்ட மண் பாண்டத்தைவனையும் சக்கரம்போல; திரிந்த - சுழலலாயிற்று. எதிர்த்து நின்ற நிலையில் குன்றோடு குன்று எதிர்ப்பது போலும். இருசிங்கங்கள் எதிர்ப்பன போலும் எதிர்த்தனர். சாரி திரிந்ததில், திரிந்த வேகத்தால் நிலமானது குயவன் திகிரிபோலச் சுழலலாயிற்று என்பதாம். உவமை அணி. 'பாரில் திரியும் பனிமால் வரை பண்பார்'' (3979) என்றதும் காண்க. 'குலால் மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல' (491); ''கூட்டுற முடுக்கி விட்ட குயமகன் திகிரிபோல'' (சீவக. 786) என்பன ஒப்புநோக்கத் தக்கன. சாரி - வட்டமாய் ஓடித்திரிகை; இது சாரிகை எனவும்படும். 46 |