3983. | கடல் ஒன்றினோடு ஒன்று மலைக்கவும், காவல் மேருத் திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும், சீற்றம் என்பது உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும், கண்டிலாதேம், மிடல், இங்கு, இவர் வெந் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம். |
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் - கடல்கள் ஒன்றோடொன்று எதிர்த்துப் போர்செய்யவும்; காவல் மேருத்திடல் ஒன்றினோடு ஒன்று - நிலவுலகத்தைப் பாதுகாக்கும் மேருமலை இரண்டு உருப்பெற்ற ஒன்றோடொன்று; அமர் செய்யவும் - போர் செய்யவும்; சீற்றம் என்பது - சினம் என்னும் குணம்; இரண்டு ஆகி உடல் கொண்டு - இரண்டு ஆண் வடிவம் கொண்டதாகி; உடற்றவும் - ஒன்றோடொன்று போர் செய்யவும்; கண்டிலாதேம் - பார்த்திராத நாங்கள்; இங்கு - இவ்வுலகில்; மிடல் இவர் வெந்தொழிற்கு - வலிமை பொருந்திய வாலி சுக்கிரீவர் செய்யும் கொடிய போர்த்தொழிலுக்கு; ஒப்புரை வேறு காணேம் - உவமை கூற வேறு அறியோம். கடலொடு கடல் மோதுதலும், மேருமலை ஒன்றினோடொன்று போர் செய்தலும், சீற்றம் என்பது இரண்டு வடிவாகி மலைதலும் உளவாயின் வாலி சுக்கிரீவர் கடும்போர் செய்தற்கு ஒப்புமையாகும் என்பது கருத்து. இல்பொருள் உவமை அணி. வாலி, சுக்கிரீவர்களின் தோற்றத்திற்கு உவமைகள் கூறி, அவர்கள் போர்ச் செயலுக்கு உவமைகூற இயலவில்லை எனக் கூறிய நயம் காண்க. மேரு மலை, நிலவுலகம் அசையாவண்ணம் நடுவே நுழைக்கப்பெற்ற இருப்புச் சலாகை போன்று ஊடுருவி நின்று இவ்வுலகினைத் தாங்கி நிற்கும் தன்மையது என்பதால் 'காவல் மேருத்திடல்' எனப்பட்டது. திடல் - மேடு; 'திடல் துடைத்தன தசமுகன் சரம்' (7211) என்ற இடம் காண்க. ''மேரு, பூமிக்கு நாராசம் போலத் தென்துருவம் முதல் வடதுருவம் வரையும் உள்ளே வளர்ந்து வடதுருவத்தில் மேலோங்கியிருக்கும். பொன்மயமான மலை'' என்ற புராண நூற் கொள்கை நோக்கத்தக்கது. 49 |