3984. ஊகங்களின் நாயகர் வெங்
      கண் உமிழ்ந்த தீயால்,
மேகங்கள் எரிந்தன; வெற்பும்
      எரிந்த; திக்கின்
நாகங்கள் நடுங்கின;
      நானிலமும் குலைந்த;
மாகங்களை நண்ணிய விண்ணவர்
      போய் மறைந்தார்.

     ஊகங்களின் நாயகர் - வானரத் தலைவர்களான அந்த வாலி
சுக்கிரீவர்களுடைய; வெங்கண் உமிழ்ந்த தீயால் - கொடுமை மிக்க கண்கள்
சொரிந்த நெருப்பினால்; மேகங்கள் எரிந்தன - மேகங்கள் எரிந்து கரிந்து
போயின; வெற்பும் எரிந்த - மலைகளும் எரிந்தன; திக்கின் நாகங்கள்
நடுங்கின
- திசை யானைகள் அஞ்சி நடுங்கின; நானிலமும் குலைந்த -
நால்வகைப்பட்ட நிலங்களும் தம் நிலையழிந்தன; மாகங்களை நண்ணிய -
(போரைக்காணும் பொருட்டு) வானிடத்தைச் சார்ந்து நின்ற; விண்ணவர்போய்
மறைந்தார் -
 தேவர்கள் (தமக்குப் பாதுகாவலான இடத்தை நாடி) ஓடி
மறைந்தார்கள்.

     நானிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன.  நானிலம்
என்னும் சொல் பொதுவாகப் பூமிக்குக் கூறப்படுவதாயினும் குலைந்த என்ற
பன்மை வினை கொண்டதால் நால்வகைப் பட்ட நிலங்கள் எனப் பொருள்
கொள்ளப்பட்டது.  நிலவுலகில் நிகழும் போர்களைக் காணத் தேவர்கள்
வருதல் இயல்பாதலின் 'மாகங்களை நண்ணிய விண்ணவர்' எனப்பட்டனர்.
வானுலகம் பலவாதலின் மாகங்கள் எனப் பன்மையில் கூறப்பட்டது.

     இப்பாடல் உயர்வு நவிற்சி அணி.  'விண்ணவர் போய் மறைந்தார்'
என்பதால் போரின் கடுமை புலனாகும்.                             50