3985. | 'விண் மேலினரோ? நெடு வெற்பின் முகட்டினாரோ? மண் மேலினரோ? புற மாதிர வீதியாரோ? கண் மேலினரோ?' என, யாவரும் காண நின்றார், புண்மேல் இரத்தம் பொடிப்ப, கடிப்பார், புடைப்பார். |
விண் மேலினரோ - (போர்புரியும் வாலி சுக்கிரீவர்) வானத்தில் மேல் உள்ளனரோ? நெடுவெற்பின் முகட்டினாரோ - நீண்டுயர்ந்த மலைகளின் சிகரங்களில் உள்ளனரோ?மண் மேலினரோ - நிலவுலகத்தில் உள்ளனரோ? புறமாதிர வீதியாரோ - புறத்தேயுள்ள திசைகளின் எல்லையில் உள்ளனரோ? கண் மேலினரோ - (அல்லது நமது) கண்களில் உள்ளனரோ? என யாவரும் காண நின்றார் - என்று எல்லோரும் காணும்படியாக எங்கும் திரிந்து நின்றவர்களாய்; புண்மேல் இரத்தம் பொடிப்ப - (அவர்கள்) உடல்களில் புண்கள் உண்டாகி அவற்றின் மேல் குருதி சிந்துமாறு; கடிப்பார் புடைப்பார்- ஒருவரையொருவர் கடிப்பாரும் குத்துவாரும் ஆனார்கள். அவ்வாலி சுக்கிரீவர் விண்மீதும், மலைகள்மீதும், திசைகளிலும் எல்லைகளிலும் சென்ற பொருதனர்; ஓரிடத்தில் இல்லாது பல இடங்களில் சுழன்று திரிந்து போர் செய்ததால், பார்ப்பவர் கண்கள் பட்ட இடங்களில் எல்லாம் காணப்பட்டனர். அதனால் 'கண்மேலினரோ' என ஐயம் கொள்ளுமாறு போர் செய்தனர் என்றார். அவர்கள் மிக்க விரைவோடு பல இடங்களுக்குச் சென்று போர் புரிந்தனர் என்பதை முதல் மூன்றடிகளால் உணரலாம். புடைத்தல் - கையினால் தாக்குதல். 51 |