3986. | ஏழ் ஒத்து, உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும், ஆழிக் கிளர் ஆர் கலிக்கு ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை; பாழித் தடந் தோளினம் மார்பினும் கைகள் பாய, ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது, குத்தும் ஓதை. |
ஆர்ப்பின் ஓசை - (அவ்விருவரும்) ஆரவாரித்து எழுப்பிய பேரொலி; ஏழ் ஒத்து உடன் ஆம் - ஏழு கடல்களும் ஒருங்கு சேர்ந் தனவாய்; திசை எட்டொடு இரண்டும் முட்டும் - எட்டும் இரண்டுமாகிய பத்துத்திசைகளில் மோதும்போது; ஆழிக்கிளர் ஆர்கலிக்கு - கடல்களில் உண்டாகின்ற பேரொலிக்கு; ஐம்மடங்கு - ஐந்து மடங்கு மிக்கு ஒலிப்பதாயிற்று; பாழித் தடந்தோளினும் - வலிமை பொருந்திய பெரிய தோள்களிலும்; மார்பினும் - மார்பிலும்; கைகள் பாய - கைகள் விரைந்து செல்லுமாறு; குத்தும் ஓதை - (ஒருவரையொருவர்) குத்துதலால் ஏற்படும் ஓசை; ஊழிக்கிளர் - யுகமுடிவில் (உலகை அழிப்பதற்கு) எழுகின்ற; கார் இடி ஒத்தது - கருமேகங்களின் இடி முழக்கத்தை ஒத்திருந்தது. போரிடுகையில் ஆரவாரித்தலும், ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொள்ளுதலும் வீரர் இயல்பாகும். ஆர்ப்பு, குத்து இவற்றால் எழுந்த ஓசைகளின் கடுமை இப்பாடலில் விளக்கப்பெற்றது. அவர்களின் ஆர்ப்பொலி ஏழுகடல்களும் ஒன்று சேர்ந்து பத்துத்திசைகளில், பரவுகையில் ஏற்படும் ஓசையினும் பல மடங்கு அதிகமாயிற்று என்பது முதல் இரண்டடிகளின் பொருள். ஐம்மடங்கு என்பது மிகுதியைக் குறித்து நின்றது. திசைகள் பத்தாவன - எட்டுத் திசைகளுடன் மேலும், கீழும் ஆகிய இரு திசையும் சேர்ந்தவை. ஆர்கலிக்கு - ஆர்கலியினும். உருபுமயக்கம். 52 |