3987. வெவ் வாய எயிற்றால் மிடல்
      வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரிஅது,
      ஆசைகள்தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ்
      சுடர் மீன்கள் யாவும்,
செவ்வாயை நிகர்த்தன; செக்கரை
      ஒத்த, மேகம்.

     மிடல் வீரர் - வலிமையையுடைய வாலி சுக்கிரீவர்; மீச் சென்று -
ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து; வாய் வெம் எயிற்றால் கடிப்ப - தம்
வாயிலுள்ள கொடிய பற்களால் ஒருவரையொருவர் கடித்ததால்; அவ்வாய்
எழு சோரி அது -
கடித்த அவ்விடங்களிலிருந்து பெருகிய இரத்தமானது;
ஆசைகள் தோறும் வீச -
எல்லாத் திசைகளிலும் தெறித்ததால்; எவ்வாயும்
எழுந்த -
வானத்தில் எல்லாவிடங்களிலும் தோன்றிய; கொழுஞ்சுடர்
மீன்கள்யாவும் -
மிக்க ஒளியையுடைய விண்மீன்கள் எல்லாம்; செவ்வாயை
நிகர்த்தன -
(தம்மீது குருதி பட்டதால் தம் இயல்பான நிறம் மாறி) செவ்வாய்
என்னும் கோளினை ஒத்து விளங்கின; மேகம் செக்கரை ஒத்த - மேகங்கள்
செவ்வானத்தை ஒத்து விளங்கின.

     கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது.
செவ்வாய் - நவக்கிரங்களில் ஒன்று.  சிவந்த நிறமுடையது.  சோரி அது
என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.  செக்கர் - செவ்வானம்.  இது செக்கல்
என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக்
குறித்தது.                                                      53