3988.வெந்த வல் இரும்பிடை
      நெடுங் கூடங்கள் வீழ்ப்ப,
சிந்தி எங்கணும சிதறுவபோல்,
     பொறி தெறிப்ப,
இந்திரன் மகன் புயங்களும்,
      இரவி சேய் உரனும்,
சந்த வல் நெடுந் தடக்
      கைகள் தாக்கலின், தகர்வ.

     வெந்த வல் இரும்பிடை - (உலைக்களத்தில்) பழுக்கக் காய்ந்த வலிய
இரும்பின் மீது; நெடுங்கூடங்கள் வீழ்ப்ப - பெரிய சம்மட்டிகளால் அடிக்க;
சிந்தி எங்கணும் சிதறுவபோல -
(அதனின்றும் தீப்பொறிகள்)  சிந்தி
எல்லாவிடத்தும் சிதறுவன போல; பொறி தெறிப்ப - தீப்பொறி பறக்க;
இந்திரன் மகன் புயங்களும் -
இந்திரன் மகனாகிய வாலியின் தோள்களும்;
இரவி சேய் உரனும் -
சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன் மார்பும்; சந்த வல்
நெடுந்தடக்கைகள் -
அழகிய வலிய நீண்ட பெரிய கைகள்; தாக்கலின்
தகர்வ -
அறைவதனால் சிதைவுறுவன ஆயின.

     கூடம் - சம்மட்டி.  கொல்லர் இருவர் எதிர் எதிராக நின்று ஒவ்வொரு
வரும் ஒரு சம்மட்டி கொண்டு மாறி, மாறி அடிப்பாராதலின் 'கூடங்கள்'
எனப்பன்மையால் கூறப்பட்டுள்ளது.  வாலியின் தோள்களுக்கும் சுக்கிரீவனது
மார்புக்கும் இரும்பும், அவர்களது கைகளுக்கு இரும்பை அடிக்கும்
சம்மட்டியும் உவமை.  சுக்கிரீவனும் வாலியும் ஒருவர்க்கொருவர்
கைக்கொண்டு தாக்க அவர்களது தோள்களினின்றும், மார்பினின்றும் நெருப்புப்
பொறிகள் தெறித்தனஎன்பதாம்.                                  54.