3989.உரத்தினால் மடுத்த உந்துவர்;
      பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்;
      கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்;
      பொருப்புஇனம் வாங்கிச்
சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்;
      தெழிப்பர்; தீ விழிப்பர்.

     உரத்தினால் மடுத்து உந்துவர் - (அவ்விருவரும் ஒருவரையொருவர்)
தத்தம் மார்பினால் தாக்கித் தள்ளுவார்கள்; பாதம் இட்டு உதைப்பர் -
கால்களால் உதைப்பார்கள்; கரத்தினால் விசைத்த எற்றுவர் - கைகளால்
வேகமாய்த் தாக்குவார்கள்; கடிப்பர் - வாயினால் கடிப்பார்கள்; நின்று
இடிப்பர் -
ஒருவர்க்கொருவர் எதிர்நின்று இடிப்பார்கள்; மரத்தினால்அடித்து
உரப்புவர் -
மரங்களைக்கொண்டு அடித்துக் கொண்டு அதட்டுவார்கள்;
பொருப்பு இனம் வாங்கி -
மலைக்கூட் டங்களைப் பெயர்த்து; சிரத்தின்
மேல் எறிந்து -
தலை மேல் வீசி; ஒறுக்குவர் - தண்டிப்பர்; தெழிப்பர் -
ஆரவாரிப்பார்கள்; தீ விழிப்பர் - (சினத்தால்) நெருப்புப் போல விழித்து
நோக்குவர்.

     உந்துதல், உதைத்தல், எற்றுதல், கடித்தல், இடித்தல், மரம் கொண்டு
அடித்தல், உரப்புதல், ஒறுக்குதல், தெழித்தல் என வாலியும் சுக்கிரீவனும்
போரிடும் வகைகள் கூறப்பட்டன.                                 55