3990. எடுப்பர் பற்றி; உற்று ஒருவரை
      ஒருவர் விட்டு எறிவர்;
கொடுப்பர், வந்து, உரம்;
      குத்துவர் கைத்தலம் குளிப்ப;
கடுப்பினில் பெருங் கறங்கு
     எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர்; பின்றுவர்; ஒன்றுவர்;
      தழுவுவர்; விழுவர்.

     எடுப்பர் பற்றி - ஒருவரை ஒருவர் பிடித்துத் தூக்குவர்; ஒருவரை
ஒருவர் -
ஒருவர் மற்றொருவரை; உற்றுப் பற்றி- நெருக்கிப் பிடித்து; விட்டு
எறிவர் -
உயரத் தூக்கி வீசி எறிவர்; வந்து உரம் கொடுப்பர் - (அங்ஙனம்
வீசி எறியப்பட்டவர்) தாமே வந்து எதிரிக்குத் தம் மார்பைக் காட்டுவர்;
கைத்தலம் குளிப்பக் குத்துவர் -
(அவ்வாறு காட்டிய மார்பில்) மூடியகை
புதையும்படி குத்துவார்கள்; கடுப்பினில் பெருங்கறங்கு என - விரைவுடன்
பெரிய காற்றாடி போல; சாரிகை பிறங்கத் தடுப்பர் - வலசாரி, இடசாரி
முறைகள் விளங்க ஒருவரை ஒருவர் மேற்சொல்ல விடாமல் தடுப்பார்கள்;
பின்றுவர் -
(விசையொடு தாக்குதல் பொருட்டு) பின்வாங்குவார்கள்;
ஒன்றுவர் -
இருவரும ஒன்றி நிற்பர்.  தழுவுவர் விழுவர் - தழுவிக்
கொண்டு கீழே விழுவார்கள்.

     சாரிகை - வட்டமாக வளைந்தோடுதல்.  பின்றுதல் - தாக்குவதற்காகப்
பின் வாங்குதல்.                                                56