3992. | மண்ணகத்தன மலைகளும், மரங்களும், மற்றும் கண்ணகத்தினில் தோன்றிய யாவையும், கையால், எண் நகப் பறித்து எறிதலின், எற்றலின், இற்ற, விண்ணகத்தினை மறைத்தன; மறி கடல் வீழ்ந்த. |
மண்ணகத்தன மலைகளும்- நிலத்தில் இருப்பனவாகிய மலை களையும்; மரங்களும் - மரங்களையும்; மற்றும் கண்ணகத்தில் தோன்றிய - மேலும் கண்களில் பட்ட; யாவையும் - எல்லாப் பொருள்களையும்; கையால்- (அவர்கள்) தத்தம் கைகளால்; எண் நகப் பறித்து எறிதலின் - வலிமை விளங்கப் பெயர்த்தெடுத்து வீசி எறிந்ததனாலும்; எற்றலின் - (அவற்றால்) தாக்கியதாலும்; இற்ற - (அம்மலை முதலியன) முறிந்தவனாய்; விண்ணகத்தினை மறைத்தன- விசும்பிடத்தை மறைத்தன; மறிகடல் வீழ்ந்த- மேலும் மடங்கி விழும் அலைகளை உடைய கடலில் அவை வீழ்ந்தன. எண் - ஈண்டு உள்ளத்தின் திண்மையைக் குறித்து நின்றது. பறித்தல் - வேருடன் பெயர்த்தெடுத்தல். வானமெங்கும் பரவி நிறைதலால் 'விண்ணகத்தினை மறைத்தன' என்றார். 'மண்ணகத்தன' என்பதை மரங்களுக்கும் இயைக்கலாம். கண் அகத்தில் - கண் முன்னிலையில் என்றபடி. 58 |