3993.வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்;
      வேறு என்னை விளம்பல்?
ஒருவர்க்கு ஆண்டு அமர்,
      ஒருவரும் தோற்றிலர்; உடன்று
செருவில் தேய்த்தலின், செங் கனல்
      வெண் மயிர்ச் செல்ல,
முரி புல் கானிடை எரி
      பரந்தன என முனைவர்.

     ஆண்டு அமர் - அப்பொழுது நடந்த போரில்; ஒருவர்க்கு ஒருவரும்
தோற்றிலர் -
ஒருவர் மற்றொருவர்க்குத் தோல்வி அடையாதவராய்; உடன்று
செருவில் தேய்த்தலின் -
கடுமையாக எதிர்த்துப்
போரில் ஒருவரை மற்றொருவர் தேய்த்து வருத்துதலால்; செங்கனல்
வெண்மயிர்ச்செல்ல -
(உண்டான) சிவந்த கோபத்தீ வெண்மையான
மயிர்க்கால் தொறும் வெறிப்பட; முரிபுல் கானிடை - உலர்ந்த புல் நிரம்பிய
காட்டிடத்தே; எரி பரந்தன என - தீப்பற்றி எரிந்தது போல் தோன்ற;
முனைவார் -
(இருவரும்) போர் புரிவாராயினர்; விண்ணவர் வெருவிச்
சாய்ந்தனர் -
(அப்போரின் கடுமையைக் கண்டு) தேவர்கள் அஞ்சி
நிலைகுலைந்தனர்; என்னை வேறு விளம்பல் - (போரின் கடுமை குறித்து)
கூறத்தக்கது வேறு யாது உளது?

     செங்கனல் - செம்மை வெகுளியைக் குறிப்பதால் கோபத்தீ எனக்
கொள்ளப்பட்டது.  கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என்பது
தொல்காப்பியம் (தொல். சொல். உரி. 74).  முரிபுல்கானிடை எரி பரந்தன
எனச் செங்கனல் வெண்மயிர்ச் செல்ல என்றது உவமை அணி.
வானரர்களுக்கு உடம்பில் வெண்மயிர் அடர்ந்திருத்தலால் காய்ந்த புல்
உவமையாயிற்று.  அடர்த்தியையும் மிகுதியையும் குறிக்கக் 'கான்' என்றார்.
செங்கனல் வெண்மயிர்ச் செல்ல - முரண்தொடை.                  59