சுக்கிரீவனைக் கொடிப் பூ அணிந்து சென்று போர் செய்யுமாறு இராமன் சொல்ல, அவ்வாறே சுக்கிரீவன் மலைதல் 3995. | மலைந்தபோது இனைந்து, இரவி சேய், ஐயன்மாடு அணுகி, உலைந்த சிந்தையோடு உணங்கினன், வணங்கிட, 'உள்ளம் குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்; கொடிப் பூ மிலைந்து செல்க; என விடுத்தனன்; எதிர்த்தனன் மீட்டும். |
மலைந்த போது - (இவ்வாறு வாலி) கடுமையாகப் போர் செய்த பொழுது; இரவிசேய் இனைந்து - சூரியனின் மைந்தன் சுக்கிரீவன் மிக வருந்தி; ஐயன்மாடு அணுகி- இராமனிடம் வந்து; உலைந்த சிந்தையொடு- வருந்திய மனத்துடன்; உணங்கினன் வணங்கிட - வாட்ட முற்றவனாகி, (இராமனைப்) பணிந்து நிற்க; உள்ளம் குலைந்திடேல் - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) 'மனம் வருந்தாதே; உமை வேற்றுமை தெரிந்திலம் - உங்களிடை (இன்னான் வாலி, இன்னான் சுக்கிரீவன் என்று) வேறுபாடு அறியாமல் போனோம்; கொடிப் பூ மிலைந்து செல்க - (வேறுபாடு தெரியுமாறு) நீ கொடிப்பூவினைச் சூடிச் செல்வாயாக'; என விடுத்தனன் - என்று சொல்லி (அவனை) அனுப்பினான்; மீட்டும் எதிர்த்தனன் - (அவ்வாறே கொடிப்பூவைச் சூடிச் சுக்கிரீவன்) மீண்டும் வாலியை எதிர்க்கலானான். வாலியும் சுக்கிரீவனும் நிறத்தாலும் வடிவத்தாலும் ஒத்து விளங்குவதால் போர் செய்கையில் இன்னின்னார் என்ற வேறுபாடு தெரியாமல் தவறிப்போய் அம்பு சுக்கிரீவன்மீது பட்டுவிடுமோ என்ற ஐயத்தால் இராமன் அம்பு எய்யாமல் இருந்தான். வேறுபாடு தெரியக் கொடிப் பூவைச் சூட்டிக் கொண்டால் வாலி மேல் அம்பு தொடுக்கலாம் என இராமன் கூற, அவ்வாறே அடையாள மாலையைச் சூட்டி சுக்கிரீவன் மீண்டும் வாலியை எதிர்க்கலானான் என்க. 61 |