3997. | அயிர்த்த சிந்தையன், அந்தகன் குலைகுலைந்து அஞ்ச, செயிர்த்து நோக்கினன்; சினத்தொடு சிறு நகை செய்யா, வயிர்த்த கையினும், காலினும் கதிர்மகன் மயங்க, உயிர்த் தலந்தொறும் புடைத்தனன்; அடித்தனன்; உதைத்தான். |
அயிர்த்த சிந்தையன் - (தோற்றோடியவன் மீண்டும் வந்தது எப் படி என்று) ஐயுற்று மனத்தினனாகிய வாலி; அந்தகன் குலை குலைந்து அஞ்ச - யமனும் மனம் கலங்கி அஞ்சுமாறு; செயிர்த்து நோக்கினன் - (சுக்கிரீவனை) வெகுண்டு நோக்கியவனாய்சினத்தொடு சிறுநகை செய்யா - கோபத்தோடு (இகழ்வாக) முறுவலித்துச் சிரித்து; வயிர்த்த கையினும் காலினும் - திண்மை மிக்க தன் கைகளாலும் கால்களாலும்; கதிர்மகன் மயங்க - கதிரவன் மகனாகிய சுக்கிரீவன் மயக்கமடையுமாறு; உயிர்த்தலந்தொறும் - (அவனது) உயிர் நிலையில் எல்லாம்; புடைத்ததன் - குத்தினான்; அடித்தனன் - அடித்தான்; உதைத்தான் அயிர்த்த சிந்தையன் - தோற்றோடிய சுக்கிரீவன் மீண்டும் வந்து போர்புரியக் காரணம், தன்னை வெல்லுவதற்குப் பெருந்துணை வலிமை பெற்றமையாலோ என்று ஐயுற்று மனநிலையைக் குறிக்கும். குலை குலைதல் - மனம் நடு நடுங்கல். வயிர்த்த திண்மை, வயிரத்தின் தன்மைவாய்ந்த திண்மை. கதிர் - சூரியன்; கதிர் - ஒளி; பண்பாகுபெயராய்க் கதிரவனைக் குறித்தது. கையினும் காலினும் புடைத்தனன், அடித்தனன், உதைத்தான் என்பது நேர் நிரல் நிறை அணி. கையில் புடைத்தனன், அடித்தனன் எனவும் காலில் உதைத்தான் எனவும் நிரலே இயைக்க. சிறுநகை இகழ்ச்சி பற்றியது. சிறுநகை செய்யா - சிரித்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 63 |