3998.கக்கினான்உயிர், உயிர்ப்பொடும்;
     செவிகளின், கண்ணின்,
உக்கது, ஆங்கு, எரிப்
     படலையோடு உதிரத்தின் ஓதம்;
திக்கு நோக்கினன், செங் கதிரோன்
     மகன்; செருக்கிப்
புக்கு, மீக் கொடு
     நெருக்கினன், இந்திரன் புதல்வன்.

     ஆங்கு - அப்பொழுது; செங்கதிரோன் மகன் - சிவந்த கதிர்களை
உடைய சூரிய மைந்தனாம் சுக்கிரீவன்; உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் -
பெரு மூச்சுடனே உயிரைக் கக்கலானான்; செவிகளின் கண்ணின் -
(அவனது) காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும்; எரிப் படலையோடு -
நெருப்புத் தொகுதியோடு; உதிரத்தின் ஓதம் - குருதி வெள்ளம்; உக்கது -
சிந்தியது; திக்கு நோக்கினான் - (அதனால் செயலற்றவனாய் இராமன் உள்ள)
திசையை நோக்கினான்; இந்திரன் புதல்வன் - இந்திரன் புதல்வனாகிய வாலி;
செருக்கி -
செருக்குற்று; புக்கு மீக் கொடு நெருக்கினன் - மேல்மேலும்
தாக்கி வருத்திக் கொண்டிருந்தான்.

     உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் - உயிர் போய் விடும் என்னும்படி
பெருமூச்சு விடலானான் என்பதாம்.  வாலியை எதிர்த்து நிற்கும் ஆற்றல்
இல்லாதவனாய் இராமனது உதவியை நாடி அவனுள்ள திசை நோக்கித் தன்
நிலையைப் புலப்படுத்தவே 'திக்கு நோக்கினான்' என்றார்.            64