சுக்கிரீவனை வாலி மேலே தூக்கலும், இராமன் அம்பு செலுத்தலும்

3999.'எடுத்துப் பாரிடை எற்றுவேன்,
      பற்றி' என்று, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன்
      இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல்,
      கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள்
      உறுத்து, இராகவன் துரந்தான்.

     பற்றி எடுத்துப் பாரிடை எற்றுவென் - (இவனைப்) பிடித்து
எடுத்துத்தரையில் மோதுவேன்; என்று - என்று எண்ணி; இளவல் - தன்
தம்பியான சுக்கிரீவனது; கடித்தலத்தினும் - இடையிலும்; கழுத்தி
னும் -
கழுத்திலும்; தன் இரு கரங்கள் மடுத்து - தனது கைகள்
இரண்டையும் செலுத்தி; மீக் கொண்ட வாலிமேல் - (அவனை) மேலே
தூக்கியவாலியின் மேல்; இராகவன் - இரகு குலத் தோன்றலாகிய இராமன்;
கோல்ஒன்று வாங்கி - அம்பொன்றை எடுத்து; தொடுத்து - வில்லில்
பூட்டி; நாணொடு தோள் உறுத்து - வில்லின் நாணுடன் (தனது) தோளைப்
பொருந்துமாறு செய்து; துரந்தான் - செலுத்தினான்.

     இடையில் ஒரு கையினையும் கழுத்தில் ஒரு கையினையும் கொடுத்துச்
சுக்கிரீவனை மேலே எடுத்துப் பூமியில் மோதிக் கொல்ல முயல்கையில்
இராமன் வாலியின் மேல் அம்பைத் தொடுத்தான் என்பதில் சுக்கிரீவன்
உயிரைக் காக்க வேண்டி தேவை இராமனுக்கு ஏற்பட்டதை உணரமுடிகிறது.
இளவல் - தம்பி; அல் - பெயர் விகுதி. கடிதலம் என்பது எதுகை நோக்கி,
தகரவொற்று இரட்டித்தது.  கோல் - அம்பு.                         65