4000. | கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச் சேரும் ஊசியின் சென்றது - நின்றது என், செப்ப? - நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த பாரும், சார் வலி படைத்தன் உரத்தை அப் பகழி. |
அப்பகழி - (இராமன் தொடுத்து) அந்த அம்பானாது; நீரும் - நீரும்; நீர்தரு நெருப்பும் - அந்நீரை உண்டாக்கிய தீயும்; வன் காற்றும் - அந்நெருப்பை உண்டாக்கிய வலிய காற்றும்; கீழ் நிவந்த பாரும் - (இவற்றிற்கு ஆதாரமாய்க்) கீழே விளங்குகின்ற நிலமும்; சார் வலி படைத்தன்- (ஆகிய நாற்பெரும் பூதங்களைச்) சார்ந்த ஆற்றல்களை ஒரு சேரத்தன்னிடம் பெற்றவனான வாலியின்; உரத்தை - மார்பை; கார் உண் வார்சுவை - கனிந்த உண்ணத்தக்க மிக்க சுவையுடைய; கதலியின் கனியினை - வாழப் பழத்தை; கழியச் சேரும் - தைத்துச் செல்கின்ற; ஊசியின் சென்றது- ஊசியைப் போலச் சென்று தைத்தது; செப்ப நின்றது என் - (அந்தஅம்பின் விரைவும் வன்மையும் பற்றிக்) கூற வேண்டியதாய் நின்றது யாதுஉளது? (ஒன்றுமில்லை என்ற படி). வாலி நாற்பெரும் பூதங்களின் ஆற்றல் முழுவதும் ஒரு சேரத் தன்னிடம் அமையப் பெற்றவன் என்பதை 'நிலனும் நீருமாய், நெருப்பும் காற்றும் என்று உலைவு இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்' (3824), 'வன் பெரும் பூதங்கள் நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய்' (4055) என்ற அடிகளிலும் காண்க. பூதங் கண்ணிய வலியெலாம் ஒரு தனி பொறுத்தான் (6189) என்று இரணியனைக் கவிஞர் குறித்ததையும் நினைக. ஐம்பெரும் பூதங்களுள் முதலில் உள்ளதாம் வானத்திற்கு வடிவம் இல்லாமை பற்றி அதனை இங்குக் கூறவில்லை. நெருப்பிலிருந்து நீர் தோன்றிற்று என்பது வேதநூல். அம்முறைப்படி நெருப்பிலிருந்து நீர் தோன்றியதை 'நீர்தரு நெருப்பு' என்றார். காற்றின் வலிமை கருதி 'வன் காற்று' என்றும் ஏனைய பூதங்களுக்கெல்லாம் கீழதாய் இருப்பது நிலமாதலின் அதனைக் 'கீழ் நிவந்த பார் என்றும் குறிப்பிட்டார். பகழி வாழைப்பழத்தில் ஊசி செல்வது போல் தைத்தது என்பது உவமை அணி. 'வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல' என்பது ஒரு பழமொழி. நான்கு பூதங்களின் வலிமை ஒரு சேரப் பெற்ற வாலி மார்பில் வாழைப் பழத்தில் ஊசி நுழைவது போலச் சென்றது என்றமையால் அம்பின் வலிமையினையும், விரைவினையும், செலுத்தியவன் ஆற்றலினையும் உணரலாம். இராமன் செலுத்திய அம்பு தாடகை நெஞ்சில் ஊடுருவிப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்றன்றே (388) என்று கூறும் நயத்தை ஈண்டு ஒப்புநோக்கலாம். 66 |