சாய்ந்தான் வாலி

4001. அலங்கு தோள் வலி அழிந்த
      அத் தம்பியை அருளான்.
வலம் கொள் பாரிடை எற்றுவான்
      உற்ற போர் வாலி,
கலங்கி, வல் விசைக் கால்
      கிளர்ந்து எறிவுற, கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர்
      பறிந்தாலென, வீழ்ந்தான்.*

     அலங்கு தோள் வலி அழிந்த - விளங்கும் தோள் வலிமை அழிந்து
போன; அத்தம்பியை அருளான் - அந்தத் தம்பியின் மீது இரக்கம்
கொள்ளாதவனாகி; வலம் கொள் பாரிடை - வலிமை கொண்ட நிலத்தில்;
எற்றுவான் உற்ற -
மோதிக் கொல்ல முற்பட்ட; போர்வாலி - போரிடுதலில்
சிறந்த வாலியானவன்; கலங்கி - (அம்பு பட்டவுடன்) நிலை கலங்கி;
கடைக்கால் -
ஊழிக்கால இறுதியில்; வல் விசைக் கால்- வலிய
வேகத்துடன் கூடிய பெருங்காற்று; கிளர்ந்து எறிவுற - எழுந்து வீசுவதால்;
விலங்கல் மேருவும் -
(நிலத்தினைத் தாங்கும்) மேரு என்னும் மலையும்;
வேர் பறிந்தாலென -
வேர் பறிக்கப்பெற்று விழுந்தது போல; வீழ்ந்தான் -
(நிலத்தில்) விழுந்தான்.

     கடைக்கால் - யுக முடிவாகிய ஊழிக்காலம்.  மேருவும் - உயர்வு
சிறப்பும்மை.  ஊழிக்காலக் காற்று இராமன் அம்பியின் வலிமைக்கும்
வேகத்திற்கும், மேருமலை வாலியின் பருமனுக்கும் வலிமைக்கும் உவமைகள்.
                                                             67