அம்பினை வாலி வெளியில் எடுத்தல்

4003. எழுந்து, 'வான் முகடு இடித்து
      உகப்படுப்பல்' என்று, இவரும்;
'உழுந்து பேரு முன், திசை
      திரிந்து ஒறுப்பல்' என்று, உறுக்கும்;
'விழுந்து, பாரினை வேரொடும்
      பறிப்பல்' என்று, ஓரும்;
'அழுந்தும் இச் சரம் எய்தவன்
      ஆர்கொல்?' என்று, அயிர்க்கும்.

     எழுந்து - (சாய்ந்து வீழ்ந்த வாலி) எழுந்து; வான் முகடு இடித்து -
'வானத்தின் மேல் முகட்டினை' இடித்து; உகப்படுப்பல் - 'சிதைந்து விழச்
செய்வேன்'; என்று இவரும் - என்று கூறி மேலெழுவான்; உழுந்து
பெருமுன் -
'ஓர் உழுந்து நிலைபெயர்ந்து உருளும் நேரத்திற்கு முன்னரே;
திசை திரிந்து ஒறுப்பல் -
எல்லாத் திசைகளிலும் சுற்றித் திரிந்து
அனைத்தையும் முறித்து அழிப்பேன்'; என்று உறுக்கும் - என்று சினம்
கொள்வான்; விழுந்து பாரினை - 'கீழே பாய்ந்து இப்பூமியை; வேரொடும்
பறிப்பல் -
வேரொடு பெயர்த்தெடுப்பேன்'; என்று ஓரும்- என்று
நினைப்பான்; அழுந்தும் இச்சரம் - '(வலிய) என் மார்பில்
ஆழ்ந்து தைத்துள்ள இந்த அம்பினை; எய்தவன் ஆர்கொல் - தொடுத்தவன்
யார்?' என்று அயிர்க்கும் - என்று ஐயுறுவான்.

     அம்பு பட்டதால் தளர்ந்த வாலியின் பலவித எண்ணங்களை இப்பாடல்
காட்டுகிறது.  வானத்திலிருந்து அம்பு எய்யப்பட்டதா? திசைகளிலிருந்து
விடுக்கப்பட்டதா? அன்றி நிலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டதா
என அறியாது மூவுலகத்தாரையும் வருத்துவதாக வாலி சினங்கொண்டான்.
அதனால்தான் 'வான் முகடு இடித்து உகப்படுப்பல்', 'திசை திரிந்து ஒறுப்பல்',
'விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல்' என்றான்.  உழுந்து - இப்பொழுது
'உளுந்து' என வழங்கும்.  'உழுந்து இட இடம் இலை' (754) 'நெய்யோடு
மயக்கிய உழுந்து நூற்றன்ன' (ஐங்குறு - 211).  உழுந்து விரைந்து
உருண்டோடும் இயல்புடையதாதலின், மிகச் சிறிய கால எல்லைக்கு அளவாக
உழுந்து உருளும் பொழுது எனக் கூறுவது வழக்கம்.  'இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை' (4791) என்றது காண்க.

     தன்மீது அம்பு செலுத்த யாருக்கு வலிமையுண்டு என வாலி தனக்குள்
ஐயம் கொண்டு மயங்கினான்.                                    69