4004. | எற்றும் கையினை நிலத்தொடும்; எரிப் பொறி பறப்ப, சுற்றும் நோக்குறும்; சுடு சரம்தனைத் துணைக் கரத்தால் பற்றி, வாலினும் காலினும் வலி உற, பறிப்பான் உற்று, உறாமையின் உலைவுறும்; மலை என உருளும். |
கையினை நிலத்தொடும் எற்றும் - (மேலும்) வாலி தன் கைகளை நிலத்தோடு மோதுவான்; எரிப் பொறி பறப்ப - (தன் கண்களிலிருந்து) நெருப்புப் பொறி பறக்கும்படி; கற்றும் நோக்குறும் - நாற்புறமும் சுற்றிப் பார்ப்பான்; சுடு சரம்தனை - தன்னை வருத்திய அம்பினை; துணைக் கரத்தால் பற்றி- தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு; வாலினும் காலினும்- வாலினாலும கால்களினாலும்; வலி உறப் பறிப்பான்- வலிமையுறப் பறிக்க; உற்று - முயன்று; உறாமையின் - (அம்பைப்) பறிக்க முடியாமையால்; உலைவுறும்- வருந்துவான்; மலை என உருளும் - மலை புரள்வது போல் (வலி தாங்காமல்) நிலத்தில் புரள்வான். அம்புபட்ட நிலையில் வேதனை தாங்காமல் வாலி செய்யும் செயல்கள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. சுடுசரம் - நெருப்புப்போல் உட்புகுந்து எரிக்கும் அம்பு. தாடகை வதைப்படலத்தில் 'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்' (388) எனக் கூறப்பெறும். பறிப்பான் - பானீற்று வினையெச்சம். சுடுசரம் - வினைத்தொகை. 70 |