4006. | 'நேமிதான் கொலோ? நீலகண்டன் நெடுஞ் சூலம், ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின், குன்று உருவு அயிலும், நாம இந்திரன் வச்சிரப் படையும், என் நடுவண் போம் எனும் துணை போதுமோ? யாது?' எனப் புழுங்கும். |
ஆம் இது - (என் மார்பில்பட்ட) இந்தப் படைக்கலம்; நேமி தான் கொலோ - திருமாலுடைய சுதர்சனம் என்னும் சக்கராயுதம் தானோ? நீலகண்டன் நெடுஞ்சூலம் ஆம் கொலோ - (விடமுண்டு) கறுத்த மிடற்றையுடைய சிவபிரானது நெடிய சூலாயுதம் இஃது ஆனதோ? அன்று எனில் - அவைஅல்ல என்றால்; குன்று உருவு அயிலும் - கிரவுஞ்சம் என்னும் மலையனைத் துளைத்துச் சென்ற முருகனது வேலாயுதமும்; நாம இந்திரன் வச்சிரப்படையும்- பகைவர்க்கு அச்சத்தைத் தரும் இந்திரனுடைய வச்சிரப்படையும்; என் நடுவண் - எனது மார்பில்; போம் எனும் துணை போதுமா - நுழைந்து செல்லும் என்று சொல்லத்தக்க வலிமை அமைந்ததோ? யாது? - இது யாதோ; எனப் புழுங்கும் - (தெரியவில்லையே) என்று மனம் தவிப்பான். முன்பாடலில் தன்மீது அம்பு எய்தவர் யாரோ என்று ஐயுற்றுக் கலங்கிய வாலி, இப்பாடலில் தன் மார்பில் தைத்த படைக்கலம் எத்தகையதோ என ஐயுற்று மனம் வெதும்பினான். சக்கரப்படையாயின் வட்ட வடிவினதாய், எதிர்ப்பட்டதை முழுதுவமாய் அறுத்துச் செல்லும் இயல்பினதேயன்றி மார்பில் தைத்து ஊடுருவிச் செல்லும் தன்மையதன்று; சூலப்படை மூவிலையும் நீண்ட காம்பும் கொண்ட தாய், உருவ அமைப்பிலேயே வேறுபட்டு நிற்கும். இவை இரண்டுமில்லையென்றால், கிரவுஞ்மலையைப் பிறந்த முருகனது வேலும், மலைச்சிறகரிந்த இந்திரனது வச்சிரப்படையும் மலையினும் வலிய தன் மார்பைத் தாக்கிச் செல்லும் அளவு வன்மை உடையன அல்ல. எனவே, தன் மார்பில் தைத்து வருத்தும் படைக்கலம் யாதாக இருக்கும் என வாலி மயங்கினான். 72 |