4007.'வில்லினால் துரப்ப அரிது, இவ்
      வெஞ் சரம்' என வியக்கும்;
'சொல்லினால் நெடு முனிவரோ
      தூண்டினார்' என்னும்;
பல்லினால் பறிப்புறம்; பல
      காலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும்
      அப் பகழியைக் கண்டான்.

     பலகாலும் பல்லினால் பறிப்புறும் - (மார்பில் பட்ட அம்பினைப்)
பலமுறையும் பற்களினால் கடித்து இழுப்பான்; தன் உரத்தைக் கல்லி - தன்
மார்பை அகழ்ந்து; ஆர்ப்பொடும் பறிக்கும் - பெரும் ஆரவாரத்தோடு
பறிப்பவனானான்; அப்பகழியைக் கண்டான் - (அங்ஙனம் செய்கையில்)
அந்த அம்பைக் கண்டவனான வாலி; இவ்வெஞ்சரம் - 'இந்தக் கொடிய
அம்பினை; வில்லினால் துரப்ப அரிது - வில்லினால் எய்வது அரியதாகும்;
என வியக்கும் -
என்று வியப்படைவான்; சொல்லினால் - (மந்திர)
மொழிகளின் துணையால்; நெடுமுனிவரோ தூண்டினார் - பெருமைமிகு
முனிவர்கள் இதனை ஏவினார்களோ?' என்னும் - என்று கருதுவான்.

     அம்பு என்று அறிந்த நிலையில் வாலி கூறியது.  பகழியைப் பறிக்கும்
அவன் முயற்சி இப்பாடலில் கூறப்படுகிறது. எய்யப்பட்ட அம்பின் ஆற்றலைப்
பற்றி எண்ணலானான். நெடுந்தூரத்திலிருந்து அல்லது கண்ணில் படாத
நிலையிலிருந்து அம்பினை மிக அரியநிலையில் செலுத்தியது எண்ணி
வியந்தான்.  மந்திர மொழிகளைக் கூறி முனிவர்கள் ஏவி இருப்பார்களோ என
ஐயுற்றான்.  இதனால் வில்லம்பினும் சொல்லம்பின் வலிமை கூறப்பெற்றது.
'வில்லோர் உழலும் பகை கொளினும் கொள்ளற்க,  சொல்லேர் உழவர் பகை'
(872) என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.                    73