4008. | 'சரம் எனும்படி தெரிந்தது; பல படச் சலித்து என்? உரம் எனும் பதம், உயிரொடும் உருவிய ஒன்றை, கரம் இரண்டினும், வாலினும், காலினும், கழற்றி, பரமன் அன்னவன் பெயர் அறிகுவென்' என, பறிப்பான். |
சரம் எனும்படி தெரிந்தது - (பகழியைக் கண்ட வாலி) இஃது ஓர் அம்பு என்ற நிலை தெரிந்தது; பலபடச் சலித்து என் - இனி யான் பலவிதமாக ஐயுற்று வருந்துவதால் என்ன பயன்?உரம் எனும் பதம் - மார்பு என்னும் இடத்தை; உயிரொடும் உருவிய ஒன்றை - என் மார்பைத் துளைத்துக் கொண்டு செல்ல முயலும் ஒப்பற்ற இந்த அம்பை; கரம் இரண்டினும் - (என்) இரண்டு கைகளாலும்; வாலினும் காலினும் - வாலினாலும், கால்களினாலும்; கழற்றி - மார்பினின்று நீக்கி; பரமன் அன்னவன் - மேலோனான அவனுடைய; பெயர் அறிகுவென் - பெயரைத் தெரிந்து கொள்வேன்; எனப் பறிப்பான் - எனக் கருதி (அம்பைப் பற்றி) பிடுங்குவானானான். பலவாறு எண்ணுவதால் பயனில்லை என்பதால் 'பலபடச் சலித்து என்?' என்றான். மார்பினைத் துளைத்ததோடு உயிரையும் வருத்தவல்ல கூர்மை வாய்ந்தது என்பதால் 'உரமெனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்று' என்றான். ஊன்றிய அம்பினை ஒரு கையால் எடுக்க முடியாமையால் இரண்டு கரங்களாலும், கால்களினாலும், வாலினாலும் பிடுங்க முற்பட்டான். வீரர்கள் செலுத்தும் அம்புகளில் பெயர் பொறிக்கப்பெறும் ஆதலால் எய்தவன் பெயரை அறிய வேண்டிப் 'பரமன் அன்னவன் பெயர் அறிவேன்' எனப் பறிக்க முயன்றான். தன் மார்பைத் துளைக்கும்படி அம்பு செலுத்தியவன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்பது பற்றிப் 'பரமன்' எனக் குறித்தான். சரம் -சாப்பது, வருத்துவது அல்லது அழிப்பது என்னும் காரணத்தைக் கொண்ட தொழிற்பெயர் என்பர். இப்பாடலில் கரம், வால், கால் என்ற முறையால் வாலியின் முயற்சிகளையும், சரத்தின் வலிமையையும் ஒருமிக்கச் சித்திரித்துள்ள திறம் காண்க. 74 |