மார்பினின்று அம்பை வாலி பறித்தபோது
இரத்த வெள்ளம் பெருகுதல்

4009. ஓங்கு அரும் பெருந்
     திறலினும், காலினும், உரத்தின்
வாங்கினான், மற்று அவ்
      வாளியை, ஆளிபோல் வாலி.
ஆங்கு நோக்கினர், அமரரும்
      அவுணரும் பிறரும்,
வீங்கினார்கள் தோள்;-
     வீரரை யார் வியவாதார்?

     ஆளி போல் வாலி - ஆண்சிங்கம் போன்ற வாலி; ஓங்கு அரும்
பெருந்திறலினும் -
உயர்ந்த, அரிய பெரிய ஆற்றலினாலும்; காலினும் -
கால்களினைப் பயன்படுத்தியும்; அவ்வாளியை - அந்த அம்பினை; உரத்தின்
வாங்கினான் -
மார்பினின்று பிடுங்கினான்; ஆங்கு நோக்கினர் - அங்கு
அதைப் பார்த்தவர்களான; அமரரும் அவுணரும் பிறரும் - தேவர்களும்,
அசுரர்களும், மற்றவர்களும்; தோள் வீங்கினார்கள் - தோள்கள் பூரிக்கப்
பெற்றார்கள்; வீரரை யார் வியவாதார் - வீரர்களை வியந்து
பாராட்டாதவர்கள் யார்? (யாருமில்லை என்றபடி).

     இராம பாணத்தைப் பறித்தெடுத்த வாலியின் ஆற்றலை 'ஓங்கு அரும்
பெருந்திறல்' எனக் கம்பர் பாராட்டுதல் காண்க.  வீரர்களை வேறுபாடின்றி
யாவரும் பாராட்டுவர் ஆதலின் 'வீரரை யார் வியவாதார்?' என்றார்.
வேற்றுப்பொருள் வைப்பணி. மற்று - அசை.                        75