4010. | மோடு தெண்திரை முரிதரு கடல் என முழங்கி ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்று எளிதோ? காடு, மா நெடு விலங்கல்கள், கடந்தது; அக் கடலின் - ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்துளது உதிரம். |
காடு, மாநெடும் விலங்கல்கள் - காடுகளையும், மிகப் பெரிய மலைகளையும்; கடந்தது - தாண்டியதாய்; அக்கடலின் ஊடு போதல் - அந்தக் கடலில் சென்று சேர; உற்றதனை ஒத்து - தொடங்கியதைப் போன்று; உயர்ந்துளது உதிரம் - (வாலியின் மார்பினின்று) உயர்த்தெழுந்த இரத்தவெள்ளம்; மோடு தெண் திரை - உயர்ந்த தெளிந்த அலைகள்; முரிதரு கடல் என முழங்கி - மடங்கப் பெற்ற கடல் போல ஆரவாரம் செய்து கொண்டு; ஈடு பேர் உலகு - வலிய, பெரிய (பல) உலகங்களை; இறந்துளது ஆம் எனற்கு எளிதோ - கடந்து சென்றதாம் என்று கூறுவதற்குரிய எளிமையுடையதாகுமோ? வாலி அம்பினைப் பறித்து எடுத்த அளவில் மார்பினின்று பெருகிய குருதி வெள்ளம் காடு மலைகளைக் கடந்து சென்றது; கடல்போல் முழங்கிப் பல உலகங்களைக் கடந்து சென்றது. குருதிப் பெருக்கின் மிகுதியைப் பாடல் புலப்படுத்துகிறது. உயர்வு நவிற்சி அணி. மோடு - உயர்ச்சி; ஈடு - பெருமை- அக்கடல் 'அ' உலகறி சுட்டு. 76 |