உடன்பிறப்புப் பாசத்தால் சக்கிரீவன் துயருறுதல் 4011. | வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி ஓசைச் சோரியை நோக்கினன்; உடன் பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்புண்ட அத் தம்பியும், பசுங் கண் நேசத் தாரைகள் சொரிதர, நெடு நிலம் சேர்ந்தான். |
வாசத் தாரவன் - மணம் மிக்க மலர் மாலையை அணிந்திருந்த வாலியின்; மார்பு எனும் மலை - மார்பு என்று சொல்லப்பெறும் மலை யினின்று; வழங்கு அருவி - பெருகிய அருவியாகிய; ஓசைச் சோரியை - ஆரவாரம் மிக்க குருதிப் பெருக்கை; நோக்கினன் - பார்த்து; உடன் பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்புண்ட - உடன்பிறந்தான் என்னும் அன்பாகிய கயிற்றால் கட்டுண்ட; அத்தம்பியும் - அந்தத் தம்பியான சுக்கிரீவனும்; பசுங்கண் நேசத் தாரைகள் - பசுமையான தன் கண்களினின்று அன்பினால் கண்ணீர் ஒழுக்கு; சொரிய - பெருக; நெடு நிலம் சேர்ந்தான் - நீண்ட நிலத்தின் மீது வீழ்ந்தான். என்றும் மகிழ்ச்சியாக மணம் மிகு மாலைகளை அணிந்தவனாதலின் வாலியை 'வாசத் தாரவன்' என்றார். மார்பை மலை என்றதற்கேற்ப அதிலிருந்து பெருகிய இரத்தம் அருவி எனப்பட்டது. உருவக அணி. மலையிலிருந்து வீழும் அருவி ஓசையுடன் விளங்குதல்போல மார்பிலிருந்து பெருகிய குருதியும் ஓசையுடன் விளங்கியதால் 'ஓசைச் சோரி' எனப்பட்டது. பாசம் - பற்று. பிணிக்க வல்லது ஆதலின் கயிற்றுக்காயிற்று. உடன் பிறந்தார்கள் பல காரணங்களால் முரண்பட்டு நின்றாலும் இறப்பு வருகையில் பகைமை நீங்கி இயற்கையன்பு பெருகி வருந்துவது இயல்பு. இங்ஙனம் இராவணன் இறப்பைக் கண்டு வீடணன் வருந்துவதும் காண்க. சுக்கிரீவன் பாசத்தால் பிணிக்கப் பட்டதால் பகைமை மங்கி அன்பு பெருக அவன் கண்களின் சிவப்பு மாறிப் பசுமையாயிற்று என்பதால் 'பசுங்கண்' என்றார். நேசத் தாரை - அன்பினால் பெருகும் கண்ணீர். சுக்கிரீவன் விடுத்த கண்ணீர் போலியன்று, நேசத்தாரையே என்று உலகியல் போக்கில் கூறும் கவிஞர் திறம் போற்றத் தக்கது. 77 |