4013.மும்மை சால் உலகுக்கு எல்லாம்
      மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
      பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
      மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
      கண்களின் தெரியக் கண்டான்.

     மும்மை சால் உலகுக்கு எல்லாம் - மூன்று என்னும் தொகை
பொருந்திய (வானம், பூமி, பாதாளம்) என்னும் உலகங்கள் யாவற்றிற்கும்; மூல
மந்திரத்தை -
ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை; முற்றும் தம்மையே
தமர்க்கு நல்கும் -
முழுவதுமாகத் தம்மையை வழிபடும்
அடியார்கட்கு அளிக்கும்; தனிப் பெரும் பதத்தை - ஒப்பற்ற சிறப்பு மிக்க
சொல்லை; தானே - தான் தனித்தே; இம்மையே - இந்தப் பிறவியிலேயே;
எழுமை நோய்க்கும் மருந்தினை -
எழுவகைப் பிறப்புக்களாகிய நோய்
வராமல் தடுக்கும் மருந்தை; 'இராமன்' என்னும் - இராமன் என்கின்ற;
செம்மை சேர் நாமம் தன்னை -
சிறப்புப் பொருந்திய திருநாமத்தை;
கண்களின் தெரியக் கண்டான் -
தன் கண்களினால் (அவ்வம்பில்)
தெளிவாகப்  பார்த்தான்.

     தாரக மந்திரம் என்று சிறப்பித்துக் கூறப்படும் 'இராம நாமத்தின்
பெருமை இங்கு உணர்த்தப்பட்டது.  மும்மைசால் உலகு - இப்பிறவி,
முற்பிறவி, இனிவரும் பிறவி என மூன்று பிறவிகளுக்கு இடமான உலகில்
வாழும் உயிர்கள் என்றும் பொருள் கொள்வர்.  முற்றும் தம்மையே தமர்க்கு
நல்கும் தனிப்பெரும்பதம் - தம்மை வழிபட்டார்க்குத் தம்மையே முழுமையாக
நல்குதல், இராம நாமத்தைச் சொன்னவர்கள் பெருமானின் வடிவம்  கண்டு
இன்ப அனுபவத்தில் ஆழ்ந்து பரமபதத்தை அடைவர் என்பது பொருளாகும்.
'தம்மை' என்றது அப்பெயரின் பொருளான பெருமானைக் குறித்தது.
அன்பர்களிடத்து எளியனாகும் இறை இயல்பு புலப்படுகிறது.  எடுத்த
இப்பிறவியிலேயே வினைவயத்தால் தொடரவல்ல எழுபிறப்புக்களாகிய
நோயைப் போக்க வல்ல பெயர் ஆதலின் 'இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தை' என்றார்.  பிறவியை நோய் என்றதால் இராம நாமம் அந்நோய்
தீர்க்கும் மருந்து எனப்பட்டது.  நோவினையும் நோயினையும் நோய்செய்
வினையினையும், வீ வினையினையும் தீர்த்தருளும் வேங்கடமே
(திருவேங்கடமாலை - 14) என்ற அடிகளையும் ஈண்டு ஒப்பு நோக்கலாம்.

     'எல்லீரும் அவ்இராம நாமமே சொல்லீ' (4695) என்ற வானரர்களைக்
கூறச் சொல்லி, அந்நாமம் கேட்டுச் சம்பாதி தன் இழந்த சிறகுகளைப்
பெற்றான் என்பதாலும் இராமநாமப் பெருமை புலனாகும்.  எட்டெழுத்துத்
திருமந்திரத்தின் பெருமை, பெருமிதங்களையெல்லாம் இப்பாடலால் இராம
நாமத்துக்குக் கவிச் சக்கரவர்த்தி ஆக்கினார்.  இராமன் பெயரை வாலி தன்
கண்களால் பெயர் என்ற அளவில் ஐயமின்றிக் கண்டான் ஆதலின் 'கண்களின்
தெரியக் கண்டான்' என்றார்.  இராமன் பரம்பொருள் என உணரும் பக்குவம்
நெருங்கிவருவதை இஃது உணர்த்தும்.  தானே - ஏகாரம் பிரிநிலை, இம்மையே
- ஏகாரம் தேற்றம்.  'இராமன் ' என்னும் பெயரிடத்து மூன்று இயல்புகளைக்
கூறியதால் பலபடப்புனைவணியாம்.                                79