இராமனை வாலி இகழ்தல்

4014.'இல்லறம் துறந்த நம்பி,
      எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்
      தோன்றலால், வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத
      சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது' என்னா,
     நகை வர நாண் உட்கொண்டான்.

     இல்லறம் துறந்த நம்பி - 'இல்லின்கண் மனைவியுடன் இருந்து
செய்தற்குரிய இல்வாழ்க்கையைத் துறந்து காட்டிற்கு வந்துள்ள சிறந்த
ஆண்மகனும்; எம்மனோர்க்காக - (குரங்கினத்தாராகிய) எங்கள் பொருட்டு;
தங்கள் வில்லறம் துறந்த -
தங்கள் மரபுக்குரிய விற்போரின் தருமத்தை
விட்டொழித்த; வீரன் - வீரனுமாகிய இராமன்; தோன்றலால் - பிறந்ததால்;
வேத நல்நூல் -
நல்ல வேத நூல்கள்; சொல் அறம் - சொல்கின்ற
தருமங்களை; துறந்திலாத சூரிய மரபும் - கைவிடாமல் பின்பற்றிவந்த சூரிய
குலமும்; தொல்லை நல் அறம் துறந்தது - தொன்று தொட்டு வருகின்ற
நல்ல அறநெறியை விட்டு நீங்குவதாயிற்று; என்னா நகைவர - என்று
நினைத்து, சிரிப்பு வர; நாண் உட்கொண்டான் - மனத்தே நாணமுற்றான்.

     இல்லறம் துறந்தது - மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைத்
துறந்து வனத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்டது.  வில்லறம் துறந்தது
இருவர் போரிடுகையில் மறைந்திருந்தது வாலியின்மீது அம்புதொடுத்தது.
போர்நெறி தவறியதால் 'வில்லறம் துறந்த வீரன்' என்று பழிப்புப் புலப்பட
எதிர்மறைக் குறிப்பால் கூறினான்.

     தந்தையை மெய்யனாக்கித் தாய் சொல்கொண்டு இல்லற வாழ்க்கையைத்
துறந்து, துறவறம் மேற்கொண்ட செவ்வி நோக்கி 'நம்பி' என்று போற்றியும்,
ஒரு குரங்கின் பொருட்டு விற்போரின் தருமத்தை விட்டதால் 'வீரன்' என
இழித்தும் கூறினான்.  மனைவியைப் பிரிய நேரிட்டதால் வனத்தில்
பேதுற்றவன் ஆயினன் என்ற இகழ்வுக் குறிப்பிலும் 'நம்பி' என்று
குறிப்பிட்டான் எனலும் பொருந்தும்.

     'எம்மனோர்க்காக' என்றது வானர குலத்தின் புன்மையைச் சுட்டியது.
'புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? (3968) என வாலியும் ''எங்கள்
வானரத் தொழிலுக்கு ஏற்ற புன்பகை காட்டும் யானோ?'' (6934) எனச்
சுக்கிரீவனும் கூறுதல் காண்க.

     அறம் தவறாத குலம் சூரிய குலம் என்பதை 'வேதநல் நூல் சொல்
அறம் துறந்திலாத சூரியன் மரபு' எனச் சிறப்பித்தார்.  இராமன் செய்த
நெறிதவறிய செயலால் அக்குலத்தின் சிறப்புக் குன்றியது என எண்ணி
நகைத்தான்.  இகழ்ச்சி பற்றி நகைத்தான் என்க.

     நாண் உட்கொண்டான் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு
வந்ததாகவே கருதி நாணுதல் சான்றோர் இயல்பாதலின் இராமனுக்கு வரும் பழி
கருதி நாணினான்.  'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி
என்னும் உலகு' (குறள். 1015) என்பது குறள்.  இராமன் செயலால் போர்நெறி
கெட்டது என எண்ணியதாலும், இச்செயலால் வீரர்கள் அனைவர்க்கும்
ஏற்படும் இழிவு நோக்கியும், இராமனைப் பற்றித் தான் தாரையிடம் கூறிய
வார்த்தைகள் தவறாயின என்பது குறித்தும், வாலி நாண் உட்கொண்டான்
எனவும் கொள்ளலாம்.  இராமனது செயல்பற்றிய ஏளனம் நகையாக
வெளிப்பட, அதன் விளைவான நாணத்தை வெளிக்காட்டாது அடக்கினான்
என்பதை 'நகைவர நாணுட்கொண்டான்'என்றார்.                    80