4015. | வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும் உள்கிடும்; 'இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ?' என்று உன்னும்; முள்கிடும் குழியில் புக்க மூரி வெங் களி நல் யானை தொள்கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்து சோர்வான். |
வெள்கிடும் - (வாலிதன் நிலையை எண்ணி) நாணம் கொள்வான்; மகுடம் சாய்க்கும் - (நாணத்தால்) கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்; வெடிபடச் சிரிக்கும் - வெடிப்பதுண்டது போல சிரிப்பான்; மீட்டும் உள்கிடும் - நடந்ததைக் குறித்து மீண்டும் சிந்திப்பான்; இதுவும் நான் ஓர் ஓங்கு அறமோ - 'இப்படி அம்பு செலுத்துதலும் ஒரு சிறந்த தருமமாகுமோ?' என்று உன்னும் - என்று எண்ணுவான். முள்கிடும் குழியில் - முழுகி அழுந்தத் தக்க படுகுழியில்; புக்க மூரி வெங் களி நல் யானை - (வீழ்ந்து) அகப்பட்டு கொண்ட வலிய கொடிய மதங் கொண்ட சிறந்த யானை; தொள்கொடும் கிடந்தது என்ன - சேற்றுடன் கிடந்தது போல; துயர் உழந்து அழிந்து சோர்வான் - துன்புற்று தன் வலிமை அழிந்து தளர்ச்சி அடைவான். வீழ்ந்த வாலியின் மனநிலையைப் பாடல் புலப்படுத்தும். இராமன் அறத்தின் வடிவம் என்று வாலி எண்ணியதால் 'இப்படி அம்பு செலுத்துவதும் ஒரு சிறந்த அறமாகுமா?' என எண்ணி மயங்கினான். முள்கிடுங்குழி - பெரும் பள்ளம், படுகுழி. யானை பிடிப்போர், பள்ளம் தோண்டிப் பழக்கிய பெண் யானையை ஒருபுறம் நிறுத்தி வைக்க, ஆண் யானை, பிடியைச் சேரும் ஆர்வத்தில் விரைந்து வந்து குழியி்ல் விழ; அதனைப்பிணித்து மேலேற்றிச் செல்வர். அவ்வாறு இராமன் செய்த தந்திரத்தால் வாலி அகப்பட்டு வருத்தலாயினன். உவமை அணி. தொள்கு - சேறு; வலை எனலுமாம். முன் பாடலில் புன்சிரிப்புச் (நகை வர) சிரித்தவன் இங்கு வெடிபடச் சிரித்தான் என்றது காண்க. 81 |