இராமன் வாலியின் எதிர்வந்து தோன்றலும் அவனை வாலி இகழ்தலும் 4016. | 'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின், முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர், மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு முன்னம் சொல்லும் துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, |
இறை திறம்பினனால் - தலைமைத் தன்மை உடைய இராமன் முறை தவறினன் என்றால்;இழிந்துளோர் இயற்கை என்னே - (இனி) இழிந்தோராகிய சிறியார் இயல்பு என்னாகும்?என்னின் முறை திறம் பின்னால் - அதுவும் என் திறத்தின் நீதிமுறை தவறினானே!என்று மொழிகின்ற - என்று சொல்கின்ற;முகத்தான் முன்னர் - முகத்தினனாகிய வாலியின் முன்னே;மறை திறம்பாத - வேத நெறியில் தவறாத;வாய்மை மன்னர்க்கு - வாய்மை ஒழுக்கத்தினரான அரசர்களுக்கென்று;முன்னம் சொல்லும் துறை - முன் மனு முதலிய நூல்களில் கூறப்பெற்ற அறநெறிகளை; திறம்பாமல் காக்க - வழுவாமல் காத்தல் பொருட்டு;தோன்றினான் - (உலகில்) தோன்றியவனான இராமன்;வந்து தோன்ற - வந்து தோன்ற . . . . இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடராய், இதன் கண் உள்ள 'தோன்ற' எனும் எச்சம் 'கண்ணுற்றான்' என அடுத்த பாடலில் வரும் வினை கொண்டு முடியும். மனு முதலிய அற நூல்கள் வேதத்தின் பொருளை ஒட்டியே எழுதப்படுவன. அரசர்களுக்குரிய நெறிமுறைகளைக் காக்கவே தோன்றியவன் இராமன். அறங்காக்கத் தோன்றியவன் என்பதை 'மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவம் அறத்தொடும் வளர்த்தார்' (97) ''அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்'' (1349), 'அறம் தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைத்த நீதித், திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தி, தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் வாலியின் முன்னர் இராமன் தோன்றியது, தான் வாலியைத் தண்டித்தது அறநெறிக்கு ஒத்த செயலே என்பதை உணர்த்தல் பொருட்டாகும். 82 |