4018. | 'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல், தூயவன் மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே! தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ? தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! |
தாய்மையும் - தாய் போன்ற அன்புடைமையையும்; அன்றி நட்பும் - அதுவுமன்றி நட்பாகும் பண்பினையும்; தருமமும் - அறத்தையும்; தழுவி நின்றாய் - மேற்கொண்டு நின்றவனே!வாய்மையும் மரபும் காத்து - உண்மையினையும் குலப் பெருமையினையும் காத்து; மன் உயிர்துறந்த வள்ளல் - (அவற்றின் பொருட்டுத்) தன் சிறந்த உயிரை விட்ட வள்ளலும்; தூயவன் மைந்தனே - தூயவனும் ஆன தசரத சக்கரவர்த்தியின் மகனே! நீ பரதன் முன் - நீ பரதனுக்கு முன்னர்; தோன்றினாயே - அவன் தமையனாகப் பிறந்தாயே!பிறரை(த்) தீமை தான் காத்து - மற்றவர்களைத் தீய செயல் செய்யாதவாறு விலக்கி; தான் செய்தால் - தான் தீய செயல் செய்தால்; தீங்கு அன்று ஆமோ - அது தீங்கு ஆகாது நன்மையாகுமோ? (ஆகாது). இராமன் தாய் போன்று அன்பு காட்டும் இயல்பினன் என்பதை 'அன்னையே அனைய அன்பின் அறவோர்கள்' (2555) என்று சீதையும் 'தாய்வர, நோக்கிய கன்றின் தன்மையார்' (2635) எனத் தண்டக வனத்து முனிவர்களும் கூறியவற்றால் அறியலாம். 'தோழமை' என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ (2317) என்று குகன் கூற்று இராமனின் நட்பின் சிறப்பை உணர்த்தும். இராமன் தருமத்தை நிலைநாட்டவே தோன்றியவன் என்பதைக் காப்பியம் எங்கும் காணலாம். தாய்மை, நட்பு, அறம் ஆகிய அருங்குணங்களை உடையவன் இராமன் என்பதை வாலி நன்கறிந்திருந்தனன். இங்குத் தசரதன் பெருமையும் பேசப்படுகிறது. வாய்மையினையும் குல மரபையும் காத்தற்பொருட்டு உயிர்துறந்தவன் தசரதன். வள்ளல் - பிறருக்காக உயிர்துறப்பதிலும் வள்ளலாகத் திகழ்ந்தவன். தூயவன் - மனம், மொழி, செய்கையால் தூய்மை உடையவன். அத்தகைய அரசனுக்கு மகனாகப் பிறந்தாயே என ஏசினான். பரதனுக்கு முன்னவனாகப் பிறக்கத்தக்கவன் அல்லன் இராமன் என்றான். பரதனது சிறந்த குணங்களை வாலி அறிந்திருந்தான் என்பதும் இதனால் புலனாகிறது. 'எள்ள அரிய குணத்தாலும், எழிலாலும், இவ் இருந்த வள்ளலையே அனையானை, கேகயர்கோன் மகன் பயந்தாள்' (657) என விசுவாமித்திரரும், ''நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால்; குறைவு இலன்'' (1609) எனக் கோசலையும், ''மன்புகழ்ப் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன்புகழ் ஆக்கி் கொண்டாய் உயர் குணத்து உரவுத்தோளாய்'' (2338) எனக் குகனும் பரதனைப் பாராட்டுதல் காண்க. பிறர்தீமை செய்யாதபடி பாதுகாப்பவன் தானும் தீங்கு செய்யாமல் இருப்பதை தகுதியுடைத்தாதலின் 'தீமைதான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோ' என வினவினான். எல்லா உயிர்களிடத்தும் தாய்போல் அன்புகாட்ட வேண்டியவன் ஒருவனிடத்துக் கொண்ட நட்புக் காரணத்தால் தரும நெறிவழுவலாமோ என்பது கருத்தாகும். 84 |