4019.'குலம் இது; கல்வி ஈது;
      கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின்
      நாயகம் உன்னது அன்றோ;
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை
      ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ,
      அறிந்திருந்து அயர்ந்துளார்போல்?

     குலம் இது - நீ பிறந்த குலமோ (வாய்மையின்) வழாது மன்னுயிர்
ஓம்பும் அரசர்கள் ஆண்ட) இத்தகைய பெருமை வாய்ந்தது; கல்வி ஈது - நீ
கற்ற கல்வி (உயர்ந்தோர் மாட்டுக்கற்று அறியாரையும் அறிவுறுத்திப்
பயனளிக்கும்) இத்தன்மை உடையது; கொற்றம் ஈது - உன்னுடைய
வெற்றியோ (கானகத்தில் அரக்கர்களை வென்ற) இத்தகைய சிறப்புடைத்து;
உற்று நின்ற நலம் இது -
உன்னை வந்தடைந்த நற்பண்புகளின் இயல்போ
(துன்பம் அகற்றி இன்புறுத்தும்) இவ்வியல்பானது; புவனம் மூன்றின் நாயகம்-
மூவுலகங்களையும் ஆட்டிச் செய்யும் தலைமை; உன்னது அன்றோ -
உன்னுடையதல்லவா? வலம் இது - உன் பேராற்றல் இத்தகைத்து; இவ்
வுலகம் தாங்கும் வண்மை ஈது -
இந்த உலகத்தைப் பாதுகாக்கும்
வள்ளன்மை இது; என்றால் - என்று உன்னைச் சிறப்பித்து உலகம்
சொல்வதானால்; அறிந்திருந்து அயர்ந்துளார்போல - எல்லாவற்றையும்
அறிந்திருந்தும் மதிமயங்கி மறந்தவர் போல; திண்மை அலமரச்
செய்யலாமோ -
மேற்கூறிய உறுதிகள் யாவும் நிலைகலங்குமாறு
தகுதியில்லாதனவற்றைச் செய்யலாமோ?

     குலம், கல்வி, கொற்றம், நாயகம், வலம், வண்மை ஆகிய எல்லாச்
சிறப்புக்களைப் பெற்றிருந்தும் அவற்றைக் காக்க மறந்தவன் போல மயங்கி
நடந்து கொண்டாயே என வாலி கூறினன்.

     குலம் இது - சூரிய குலம், இட்சுவாகு குலம், இரகு குலம் என உலகம்
பாராட்டும் பெருமை உடையது.  கடல் தோண்டினோர், கங்கையைக்
கொணர்ந்தோர் எனச் சிறந்த அரசர்கள் ஆட்சி புரிந்த சிறப்பு உடைத்து.
கல்வி ஈது - வசிட்டர், விசுவாமித்திரர் முதலியோர்பால் பெற்ற கல்வி,
கொற்றம் ஈது - பதினாலாயிரக் கணக்கான கரதூடணாதியரைத் தனித்து
வென்ற சிறப்புக் கொண்டது. உற்று நின்ற நலம் இது. 'குணங்களால் உயர்ந்த
வள்ளல்' (479) 'அந்தமில் பெருங்குணத்து இராமன்' (2159) என்ற அடிகளால்
அறியலாம். புவனம் மூன்றின் நாயகம். விண், மண், பாதாளம் ஆகிய உலகின்
நாயகன் இராமன் என்பதை வாலி அறிந்திருந்தான். வலம் இது - எதையும்
எதிர்க்கும் பேராற்றல்; உலகம் தாங்கும் வண்மை ஈது.  அருளால் உலகச்
சுமையை ஏற்றுக்கொள்ளும் வள்ளல் தன்மை.

     திண்மை அலமரச் செய்யலாமோ என்பதற்கு உன்பால் நான் கொண்ட
வலிய நம்பிக்கைகள் சிதையத் தகுதியல்லனவற்றைச் செய்யலாமோ எனவும்
பொருள் கொள்ளலாம்.  ஈது - இது என்பது நீண்டது, செய்யுள்விகாரம்.  85