4020.'கோ இயல் தருமம், உங்கள்
      குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா
      உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
      அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை,
     திகைத்தனை போலும், செய்கை!

     ஓவியத்து எழுத ஒண்ணா - சித்திரத்தில் எழுதிக் காட்டுதற்கு
முடியாத; உருவத்தாய் - வடிவழகுடைய இராமனே; கோ இயல் தருமம் -
அரசர்களுக்குரிய அறநெறியானது; உங்கள் குலத்து - உங்கள் குலத்தில்;
உதித்தோர்கட்கு எல்லாம் -
பிறந்தவர்கள் எல்லோர்க்கும்; உடைமை
அன்றோ -
உரியது அன்றோ?ஆவியை - (அங்ஙனமிருக்க) உன்
உயிரானவளும்; சனகன் பெற்ற அன்னத்தை - சனகன் பெற்ற நடையில்
அன்னம் போன்றவளும்; அமிழ்தின் வந்த தேவியை - அமுதம்போல்
அருமையாகக் கிடைத்த தேவியுமான மனைவியை; பிரிந்த பின்னை - பிரிந்த
பிறகு; செய்கை திகைத்தனை போலும் - செய்யும் செயலில் தடுமாற்றம்
அடைந்துள்ளாய் போலும்.

     இராமன் திருமேனி பேரழகு வாய்ந்தது என்பது 'ஓவியத்து எழுத
ஒண்ணா உருவத்தாய்' என்ற தொடர் புலப்படுத்தும்.  'ஓவியம் சுவை கெடப்
பொலிவது ஓர் உருவொடே' (1050) என வந்தமை காண்க.  'எழுதரிய
பெருமான் என்றெண்ணாது எழுதியிருந்தேனே' (திருவரங்கக் கலம்பகம் - 93)
எனப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் உருகுதலும் காண்க.

     உன் உருவச் சிறப்பிற்கேற்ற செயல் அமையவில்லையே என வாலி
வருந்தி இரக்கத்தோடு ஏசுவதாகக் குறிப்பாக உணரலாம்.  இராமன் குலத்து
முன்னோன் மனு.  அரசநெறிகளைக் கூறும் மனுதர்ம சாத்திரம் எழுதியவன்.
அந்நூலில் கூறியுள்ள தருமநெறிகளைக் குலத்துச் செல்வமாகப் பெற்றவன்
இராமன்.  அங்ஙனமிருந்தும் இத்தகைய இழிசெயலைச் செய்துவிட்டானே
என்று வாலி இரக்கமுற்றுக் கூறினான்.  இராமன் மாட்டு அன்பு கொண்ட
காரணத்தால், அவனது செயலுக்கு ஒரு காரியத்திற்கு ஒரு நியாயம்
கற்பிப்பவன் போலத் 'தேவியைப் பிரிந்தததால் செய்கை திகைத்தனையோ'
என்றான்.

     ஆவியை - சீதையே இராமனது உயிர்.  இதனைக் கூறும் வகையில்
''ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எவ் உயிர்விடும் இராமன்'' (5304);
''இன்னுயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவமொப்பான்'' (5305) என அனுமன்
உரைத்தல் காண்க.  அன்னம் - உவமை ஆகுபெயர்.  அமிழ்தின் வந்த தேவி
- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்த திருமகளின் அவதாரமே சீதை என்பதைச்
சிறப்பாகக் கூறியது.  அமிழ்தம் - இனிமைக்கு மட்டுமன்றி அருமைக்கும்
உவமை ஆயிற்று.  உங்கள் - முன்னிலை இடத்து உளப்பாட்டுப் பன்மை.
'பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு' (குறள். 995) என்றவாறு வாலியின்
பண்பு அமைந்துள்ளதுபுலனாகிறது.                               86