4021.'அரக்கர் ஒர் அழிவு செய்து
      கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல,
     மனு நெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
      எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால்,
      புகழை யார் பரிக்கற்பாலார்?

     அரக்கர் ஓர் அழிவு செய்து - அரக்கரினத்தைச் சார்ந்த ஒருவர்
உனக்கொரு தீங்கினைச் செய்து; கழிவரேல் - சென்றுவிட்டதால்; அதற்கு -
அதற்காக; வேறு ஓர் குரக்கு இனத்து - (அவ்வரக்கரினும்) வேறுபட்ட
குரங்கு இனத்தைச் சார்ந்த; அரசைக் கொல்ல - அரசனைக் கொல்லுமாறு;
மனுநெறி கூறிற்று உண்டோ -
மனுதர்ம நெறி சொன்னது உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய் -
(உனக்குரிய) கருணை என்னும் பண்பினை
எவ்விடத்துச் சிந்திவிட்டாய்? என்பால் எப்பிழை கண்டாய் - என்னிடத்தில்
என்ன குற்றத்தை நீ பார்த்துவிட்டாய்? அப்பா - ஐயனே! இது பரக்கழி -
இத்தகைய பெரும்பழியை; நீ பூண்டால் - நீயே ஏற்றுக்கொண்டால்; புகழை
யார் பரிக்கற்பாலார் -
புகழை வேறு யார் தாங்கிக் கொள்ளும்
தன்மையுடையவராவர்?

     அரக்கர் ஓர் அழிவு செய்தது, இராவணன் சீதையைக் கவர்ந்த
செயலைக் குறிக்கும்.  அரக்கன் கெடுதி செய்ய, அவனுக்குத் தண்டனை
அளிக்காமல் குரங்கினத் தலைவனைக் கொல்லும் இச்செயல், குற்றம் ஒருவன்
செய்யத் தண்டனை வேறொருவர்க்குக் கொடுப்பது போலாகும் என்னும்
கருத்தில் வாலி பேசினான். அவ்வவறு செய்தல் உன்குலத்து மனு கூறிய
அரசியல் நெறிக்கும் ஒவ்வாது என்பது வாலி கருத்து.  அருளாளனாகிய
இராமன் தன் இயல்பான இரக்க குணத்தை - வழிவழியாகப் பெற்ற பண்பை
எங்கே உகுத்துப் போக்கினான் என வினவ வேண்டி 'இரக்கம் எங்கு
உகுத்தாய்?' என்றான்.  இராமன் குல முன்னோன் சிபி ஒரு புறவின்
பொருட்டுத் தன் உடலையே அரிந்து கொடுத்தவன். பசுவின் பொருட்டுத்
தன்னையே உணவாக்கி்க் கொள்ளுமாறு சிங்கத்திடம் கூறியவன் திலீபன்.
இங்ஙனம் குல முன்னோர்க்கும் அவர்க வழி இராமனுக்கும் இயல்பாக
அமைந்த இரக்கப் பண்பு. உகுத்தல்-வேண்டுமென்றே சிந்துதல். தீமை செய்த
வரை ஒறுத்தல் அரசியல் நெறிமுறை என்றால், இரக்கமின்றித் தான் கொல்லப்
படத் தன்னிடத்துக் கண்ட குற்றம் யாது என அறிய விழைபவனாய் 'என்பால்
எப்பிழை கண்டாய்' என வினவினான்.  பரித்தல் - சுமையுடையதாயினும்
பொறுத்துச் சுமத்தல்.  பெரும்புகழைத் தாங்கக் கூடியவா இராமனைத் தவிரப்
பிறர் இலர் என்ற கருத்தில் வாலி 'புகழை யார் பரிக்கற்பாலார்' என்றான்.
அப்பா - அன்பு, வியப்பு, இரக்கம், துன்பம் ஆகிய உணர்ச்சிகளை
உணர்த்தும் சொல்.                                             87