4022. | 'ஒலி கடல் உலகம்தன்னில் ஊர்தரு குரங்கின்மாடே, கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்! ? மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம்தானும்? வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ? |
கருணை வள்ளால்!- அருள் நிறைந்த வள்ளலே! ஒலி கடல் உலகம் தன்னில் - ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில்; ஊர்தரு குரங்கின் மாடே - தாவித் திரியும் குரங்குகளிடத்துமட்டும்; கலியது காலம் வந்து கலந்ததோ - கலியினுடைய தீய காலம் வந்து கலந்துவிட்டதோ? ஒழுக்கம் விழுப்பம் தானும் - நல்லொழுக்கமும் அதனால் பெறத்தகும் சிறப்பம்; மெலியவர் பலதேயோ - வலிமை குறைந்தவர்களிடம் மட்டும் இருக்க வேண்டியனவோ?வலியவர் மெலிவு செய்தால் - வலிமையுடையவர்கள் இழி தொழிலைச் செய்வாராயின்; புகழ் அன்றி வசையும் உண்டோ - (அதனால்) அவர்களுக்குப் புகழ் ஏற்படுவதன்றிப் பழி ஏற்படுதலும் உண்டோ? ஊர்தரு குரங்கு - மரங்களிலும் மலைகளிலும் தாவித் திரிகின்ற குரங்கு. கவியது காலம் - கலிபுருடன் காலன்; அறத்திற்கு மாறான தீய செயல்கள் ஓங்கி நிற்கும் காலம். இராமன் கதை திரேதாயுகத்தில் நடந்தது. அங்ஙனமிருக்கத் தீமைகள் நடைபெறும் கலியுகம் எங்ஙனம் வந்து சேர்ந்தது? எவ்வளவோ வலிமை உடைய உயிரினங்கள் இருக்க, எளிய குரங்கினமான தன்னிடம் மட்டும் இத்தகைய அறமற்ற செயல் அருளுடைய இராமனால் நிகழ்ந்து விட்டதே என்று வருந்தியவனாய் 'ஊர்தரு குரங்கின் மாடே கலியது காலம் வந்து கலந்ததோ' என்றான். அறமானது கிருதயுகத்தில் நான்கு பாதமும். திரேதாயுகத்தில் மூன்று பாதமும், துவாபர யுகத்தில் இரண்டு பாதமும், கலியத்தில் ஒரு பாதமும் ஆக நிகழ்ந்தது, அதன் முடிவில் அறம் குறைந்து தீமை பெருகும் என்பர். கருணை வள்ளால் - வஞ்சப்புகழ்ச்சி, 'நின் கருணையும் வள்ளன்மையும் இங்ஙனம் முடிந்ததோ' என ஏசுவானாய் அங்ஙனம் விளித்தான். வள்ளால் - வள்ளல் என்ற சொல்லின் விளி; ஈற்றயல் நீண்டது. ஒழுக்கமும் விழுப்பமும் வலியவர், மெலியவர் என்ற வேறுபாடின்றிக் கடைபிடிக்கத் தக்கனவாதலின் வாலி ஏளனமாக 'மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும்' என்றான். மெலியவர் - அறிவு, ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றில் குறைபாடு உடையவர் - அவற்றில் மிக்கவர் வலியவர். ஒழுக்கமும் விழுப்பந்தானும் - மெலியவர் பாலதேயோ - பன்மை ஒருமையில் முடிந்தது. பன்மை ஒருமை மயக்கம். 'வலியவர் தவறு செய்தாலும் அவர்க்குப் பழி வராது புகழ் வருகின்றதே, இதென்ன அநீதி' என்ற பொருளில் வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ? என்றான். வல்லான் வகுத்ததே வாயக்கால்' என்ற பழமொழி இங்கு நினையத்தக்கது. 88 |