4023. | 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து, நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி, காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம்தான் இதன்மேல் உண்டோ? |
கூட்டு ஒருவரையும் வேண்டா - (பகைவரைப் போரில் வெல்வ தற்குத்) துணையாக ஒருவரையும் வேண்டாத; கொற்றவ - வெற்றியை உடையவனே! பெற்ற தாதை - பெற்ற தந்தையாகிய தசரத சக்கரவர்த்தி; பூட்டிய செல்வம் - (மூத்த மைந்தனான உன்னிடம்) தந்த அரசியல் செல்வத்தை; ஆங்கே தம்பிக்குக் கொடுத்து - அங்கே தம்பியாகிய பரதனுக்குக் கொடுத்து; நாட்டு ஒரு கருமம் செய்தாய் - நாட்டிலே ஓர் ஒப்பற்ற காரியத்தைச் செய்தாய்; போந்து - அதன் பின்னர்இவ்அரசு நல்கி - (எனக்குரிய) இவ்வரசாட்சியைக் கொடுத்து; காட்டு ஒரு கருமம் செய்தாய் - காட்டிலும் (வழக்கத்திற்க மாறான) ஒரு செயலைச் செய்தாய்; இதன் மேல் கருமம் தான் உண்டோ? - இதனினும் மேலான செயல் வேறு உண்டோ? கூட்டு - துணை. பெரும்படையொடு தன்னை எதிர்த்த கரதூடணர்களை எவருடைய துணையுமின்றி இராமன் வென்றதால் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ' என விளித்தான். 'துணை இலாதவர்' (3694) எனக் கவந்தன் குறிப்பிடல் காண்க. 'தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்' (3968) என வாலி கூறியதும் காண்க. இவ்வாறு வெல்லும் திறத்தைத் 'துணை வேண்டாச் செருவன்றி' (புறம் - 16) எனப் புறநானூறு குறிப்பிடும். தந்தையே வற்புறுத்தி அளித்த செல்வம் என்பதால், ''பூட்டிய செல்வம்'' எனவும் குறித்தான். ''தெருளுடைய மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி, இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்.'' (1603) என்ற இடம் நோக்குக. நாட்டிலே தன்னலங் கருதாது பரதனுக்கு நாடளித்த நீ, காட்டிலே தன்னலங்கருதிச் சுக்கிரீவனுக்குத் துணையாகித் தவறு செய்யாத என்னைக் கொன்றாய். முன்னர்ச் செய்த செயலை விடச் சிறந்தது இல்லை. பின்னர்ச் செய்த செயலை விட இழிந்ததும் இல்லை. இங்ஙனம் ஒன்றிற்கொன்று முரண்பட்ட செயல்களைச் செய்வார் உன்னிலும் மேம்பட்டவர் யாரே? என்றும் பொருள் கூறுவர். 89 |