4024. | 'அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத் துறை எனல் ஆயிற்ற அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம் இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், ''இலங்கைவேந்தன் முறை அல செய்தான்'' என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்! |
அறைகழல் அலங்கல் - ஒலிக்கின்ற வீரக்கழலையும் வெற்றி மாலையும் அணிந்த; வீரர் ஆயவர் - வீரராய் உள்ளவர்கள்; புரிவது ஆண்மைத் துறை - செய்யும் செயல் (அறத்தோடு மாறுபட்டதாயினும்) ஆண்மையைப் புலப்படுத்தும் போர்த்துறை; எனல் ஆயிற்று அன்றோ - எனச் சிறப்பித்துக் கூறப்படுதல் ஆயிற்று அல்லவவ?தொன்மையின் நல் நூற்கு எல்லாம் - பழமையுடையனவாய்ச் சிறந்த நல்ல அற நூல் களுக்கெல்லாம்; இறைவ - தலைவனே!நீ என்னைச் செய்தது ஈது எனில் - நீ எனக்குச் செய்தது இத்தகைய செயல் என்றால்; முனிவு இலாதாய் - சினம் கொள்ளாத இயல்புடையவனே!இலங்கை வேந்தன் - இலங்கையின் வேந்தனாகிய இராவணன்; முறை அல செய்தான் என்று - நீதியில்லாத செயல்களைச் செய்துவிட்டான் என்று; முனிதியோ - கோபிக்கக் கடவையோ? அறநெறியில் நின்று போரிடுபவரே வீரர் என்ற நிலை மாறி வீரர் எனப்படுவோர் செய்வது எதுவும் ஆண்மைச் செயல் என எண்ணுமாறு இராமன் செய்கை அமைந்து விட்டதென வாலி உரைத்தான். ''வல்லான் ஆடியதே ஆட்டம்'', கெரடி (சிலம்பம்) பழகுகிறவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்னும் பழமொழிகள் காண்க. தொன்மையின் நல் நூற்கு எல்லாம் இறைவன் - 'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்? உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ' (3689) எனக் கவந்தன் இராமனைப் போற்றுதல் காண்க. அறநூல்களின் தலைவனாக விளங்கும் இராமன் தன் திறத்துத் தீங்கு செய்துவிட்டுத் தன் குற்றம் காணாது, இராவணன் தனக்கு அறமற்ற செயல்களைச் செய்து விட்டானே என்று பிறன்குற்றம் கண்டு அவன்மீது சினம் கொள்ள இடமுண்டோ என வினவினான் வாலி. இராவணனைச் சினக்க இராமனுக்குத் தகுதியில்லை என்ற கருத்தில் 'முனிதியோ முனிவிலாதாய்' என்றான். முறையல - சீதையைக் கவர இராவணன் கொண்ட துறவு வேடம், மாயமான் அனுப்பல் போன்ற செயல்கள். 90 |