4025. | 'இருவர் போர் எதிரும்காலை, இருவரும நல் உற்றாரே; ஒருவர்மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று, வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து' எய்தல் தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம். |
இருவர் போர் எதிரும் காலை - இருவர் தம்முள் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருக்கும் நேரத்தில்; இருவரும் நல் உற்றாரே - அவ்விருவரும் (மூன்றாமவருக்கு) நல்ல உறவினரே யாவர்; ஒருவர் மேல் கருணை தூண்டி - (அவ்வாறிருக்க) அவ்விருவருள் ஒருவர் மீது அருளைச் செலுத்தி; ஒருவர் மேல் ஒளித்து நின்று - மற்றொருவர்மீது குழையும்படி வளைத்து; வாய் அம்பு மருமத்து எய்தல் - கூர்மையான நுனியுடைய அம்பினை மார்பில் செலுத்துதல்; தருமமோ - அறமாகுமா? பிறிது ஒன்று ஆமோ - அன்றி அறத்திற்கு மாறுபட்டதாகுமா?தக்கலிது என்னும் பக்கம்- அச்செயல் தகுதியில்லாதது என்னும் பக்கமே சேர்வதாகும். இருவர் மாறுபட்டுப் போர் செய்கையில் பொதுநிலையில் உள்ளவர். ஒருவர்மாட்டுக் கருணைகொண்டு, மற்றொருவர்மீது மறைந்து நின்று அம்பு செலுத்துதல் நடுநிலைமைக்குரிய செயலன்று என வாலி உரைத்தனன். தக்கிலது என்னும் பக்கம் - அறமாகுமோ, அறமாகாதோ என்பதில் ஐயமுண்டானாலுட், தக்கிலது என்பதில் ஐயமில்லை என்க. தகவிலது என்பது தக்கிலது என வந்தது. பக்கம் - பக்கம் ஆம் என ஆக்கச் சொல் வருவித்து முடிக்க. 91 |