கலிவிருத்தம் 4026. | 'வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின் வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று; பகை அன்று; பண்பு அழிந்து ஈரம் இன்றி, இது என் செய்தவாறுஅரோ? |
வீரம் அன்று - (நீ செய்த இச்செயல்) வீரத்தைக் காட்டும் செயல் அன்று; விதி அன்று - அறநூல்களில் விதிக்கப்பெற்ற விதிமுறைக்கு ஒத்ததும் அன்று; மெய்ம்மையின் வாரம் அன்று - உண்மையைச் சார்ந்ததும் அன்று; நின் மண்ணினுக்கு - உனக்கு உரிய இப்பூமிக்க; என் உடல் பாரம் அன்று- என் உடல், சுமையும் அன்று; பகை அன்று - உனக்கு நான் பகைவனும்அல்லன்; பண்பு அழிந்து - (அங்ஙனமிருக்க), நீ உன் பெருமைக் குணம்நீங்கப் பெற்று; ஈரம் இன்றி - இரக்கம் இல்லாமல்; இது செய்தவாறு என் - இச்செயலைச் செய்தது எதற்காக? இராமன் செய்த செயல் வீரத்திற்கோ, அறநெறி விதிக்கோ, உண்மையைச் சார்ந்த நிலைக்கோ பொருந்துவதன்று என வாலி பேசினான். நிலத்தின் சுமை குறையக் கொடியோரைக் கொல்வது அரச மரபு. ஆனால், தான் கொடியவன் அல்லன் ஆதலால் தன்னைக் கொன்றொழிக்க வேண்டியதில்லை என்பான் 'என் உடல் பாரம் அன்று' என்றான். நின் மண்ணினக்கு-இராமன் தசரதனின் முதல் மைந்தனாதலின் நாடு அவனுக்கு உரியதாகிறது. இட்சுவாகு குல மன்னர்க்குப் பூமி முழுவதும் உரியது என்பர். ''மன்னற்குப் பூமியும் அயோத்தி மாநகரம் போலுமே'' (174) எனத் தசரதன் சிறப்பிக்கப் பெற்றமை காண்க. பண்பு - 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலி - 133) என்றமை நோக்குக. 92 |