4027.'இருமை நோக்கி நின்று,
      யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ,
      அறம் காக்கின்ற
பெருமை என்பது? இது என்?
      பிழை பேணல் விட்டு,
ஒருமை நோக்கி
      ஒருவற்கு உதவலோ?

     இருமை நோக்கி நின்று - ஒரு பக்கத்தினர் செய்த செயல்களையும்
வேறுபாடின்றி எண்ணிப் பார்த்து நடுநிலையில் நின்று; யாவர்க்கும் ஒக்கின்ற
-
உலகில் யார்க்கும் ஒத்த வகையில்; அருமை ஆற்றல் அன்றோ -
அருமையான செயலைச் செய்வது அன்றோ. . . அறம் காக்கின்ற பெருமை
என்பது -
அறத்தைப் பாதுகாக்கின்ற பெருமைக்குரி  யது என்பது? பிழை
பேணல் விட்டு -
தவறு தன்னிடம் நிகழாத வண்ணம் காத்தலை விடுத்து;
ஒருமை நோக்கி -
ஒருவர் பக்கக் கருத்தி னையே ஏற்று; ஒருவற்கு
உதவலோ -
ஒருவனுக்கே உதவிபுரிதல்?இது என் - இது என்ன நியாயம்?

     மாறுபட்ட இருவர் செய்த நன்றும் தீதும் சீர்தூக்கிப் பார்த்து,
எல்லோர்க்கும் நடுநிலையில் நின்று, ஒரு செயலைச் செய்வதே அறத்தைக்
காக்கின்ற பெருமையாகும்; ஒரு பக்கமாக உதவி புரிதல் அப்பெருமையைத்
தராது என்கிறான் வாலி.

     இருமை நோக்கி - இம்மை, மறுமைப் பயன்களைக் கருதிப் பார்த்து
எனவும் பொருள் கொள்வர்.  நடுநிலையில் இருந்து யாவரும் ஏற்கும்
வகையில் முறை செய்தல் எளிதன்று என்பதால் 'அருமை' என்றார்.
அவ்வகை நடுவுநிலைமையின் சிறப்பைத் 'தகுதியென ஒன்றும் நன்றே
பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்' (குறள் 111) என்று குறள் விளக்கியது.
'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ' எனத் தாரையிடம்
முன்பு வாலி கூறியதை நினைவு கூர்க. (3966)                      93