4028. 'செயலைச் செற்ற பகை
      தெறுவான் தெரிந்து,
அயலைப பற்றித் துணை
      அமைந்தாய் எனின்,
புயலைப் பற்றும் அப் பொங்கு
      அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது
      என்ன முயற்சியோ?

     செயலைச் செற்ற - (உங்கள்) பாதுகாவலை அழித்த; பகை -
பகைவனான இராவணனை; தெறுவான் தெரிந்து- அழிக்கும் பொருட்டு
ஆராய்ந்து; அயலைப் பற்றி - வேறொருவனைச் (சுக்கிரீவனைச்) சார்ந்து;
துணை அமைந்தாய் எனின் -
துணைவனான அவனைச் சேர்த்துக்
கொண்டாய் என்றால்; புயலைப் பற்றும் - (அச்செயல்) மேகம் போன்ற
யானையைப் பிடித்துக் கொல்ல வல்ல; அப்பொங்கு அரி போக்கி -
அத்தகைய சினந்து எழும் சிங்கத்தைத் துணையாக்கிக் கொள்வதை விட்டு;
ஓர் முயலைப் பற்றுவது -
ஒரு முயலைத் துணையாகக் கொள்வது; என்ன
முயற்சியோ -
என்ன முயற்சியாகும்?

     செயலைச் செற்ற செயல் - காவலை அழித்து மாரீசனாகிய மாயமானைக்
கொண்டு சீதையைக் கவர்ந்து சென்றது.  பகை - இராவணன்.  அயல் -
அயலான்.  சுக்கிரீவன்.  இராவணனை எளிதில் வெல்ல வல்ல தன்னைத்
துணையாக்கிக் கொள்ளாது.  ஆற்றலில் குறைந்த சுக்கிரீவனைத்
துணைவனாகக் கொண்டது யானையை அழிக்க, அதனை எளிதில் வெல்ல
வல்ல சினம் மிக்க சிங்கத்தைத் துணைக் கொள்வதை விடுத்து எளிய
முயலைத் துணைக் கொள்வது போலப் பயனில்லாத முயற்சியாகும் என வாலி
கருதினான்.  புயல் - உவமை ஆகுபெயர்.  புயலைப் பற்றும் அப்பொங்கு
அரி - விசையுடன் எழுந்து வானளாவப் பாய்ந்து மேகத்தைப் பிடிக்கும்
கோபத்தோடு கூடிய அப்படிப்பட்ட சிங்கம் என்றும் பொருள் கொள்வர்.
தெறுவான் - வான் ஈற்றுவினையெச்சம்.                           94