4029.'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்அரோ!

     ஊர் இயன்ற மதிக்கு - (வானத்தில்) ஊர்ந்து செல்லுதலைப் பொருந்திய
சந்திரனுக்கு; கார் இயன்ற நிறுத்த - கருமை பொருந்திய நிறத்தை உடைய;
களங்கம் ஒன்று -
களங்கம் ஒன்று; உளதாம் என - உள்ளது என்று
எண்ணி; சூரியன் மரபுக்கும் - சூரியன் குலத்திற்கும்; ஓர் தொல் மறு -
தொன்மையுடையதாய்த் தொடரும் ஒரு களங்கத்தை; ஆரியன் பிறந்து -
பெருமைக்குரிய நீ பிறந்து; ஆக்கினை ஆம் - உண்டாக்கிவிட்டாய் போலும்.

     சூரிய வமிசம், சந்திர வமிசம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் அரச
குலங்கள் இரண்டனுள், சந்திர குல முதல்வனான சந்திரனுக்குக் களங்கம்
இருப்பது கருதி, நீ சூரியனுக்கும் அவன் வழியில் உள்ளார்க்கும் ஒரு
களங்கத்தை உண்டாக்கி விட்டாய் போலும் என்றான்.  மறுவில்லாததாகிய
சூரிய குலம் இராமன் பிறந்ததால் களங்கத்தைப் பெற்றது என்பது கருத்தாகும்.
இதனால் ஒருவன் செய்த குற்றம் அவன் குலத்து முன்னோரையும், வழி
வருவோரையும் சாரும் என்பது உணர்த்தப்பட்டது.

     ஊர் - முதனிலைத் தொழிற்பெயர் - 'ஊர்தரு குரங்கின் மாடே' (4022);
வானூர் மதியம் (சிலப் - 1 - 50) என்பன போல.  சூரியன் மரபுக்கும், உம்மை
உயர்வு சிறப்பு.  ஆரியன் - வஞ்சப்புகழ்ச்சியாக இகழ்ந்துரைத்தது.        95