4030.'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
இற்றையில், பிறர்க்கும் இகல் ஏறு என,
நிற்றிபோலும், கிடந்த நிலத்துஅரோ!

     மற்று ஒருத்தன் - (நினக்கு உறவினன் அல்லாத) அயலான் ஒரு
வனான சுக்கிரீவன்; வலிந்து அறை கூவ - வலிந்து வந்து என்னைப்
போருக்கழைக்க; வந்து உற்ற என்னை - (அதனால்) அவனோடு போர் புரிய
வந்த என்னை -ஒளித்து உயிர் உண்ட நீ - மறைந்திருந்து அம்பு செலுத்தி
என் உயிரைக் கவர்ந்த நீ; இற்றையில் - இப்பொழுது; கிடந்த நிலத்து -
(உயிர் நீங்கும் நிலையில் வீழ்ந்து) கிடக்கின்ற இப்போர்க் களத்தில்; பிறர்க்கும்
இகல் ஏறு என -
பிறர்க்கெல்லாம் வலிமை மிக்க ஆண் சிங்கம் போல;
நிற்றி போலும் -
நிற்கின்றாய் போலும்.

     மற்றொருத்தன் - சுக்கிரீவன்.  துணையெனக் கொள்ளத் தகாத அயலான்
என்பதால் 'மற்றொருத்தன்' எனக் கூறினான்.  தான் முற்பட்டு வந்து செய்த
போர் அன்று; சுக்கிரீவன் வலிந்து வந்து அழைத்ததால் போரிட நேர்ந்தது
என்பான் 'வலிந்து அறைகூவ வந்து உற்ற என்னை' என்றான்.  மறைந்திருந்து
உயிரைக் கவர்ந்த செயலைச் செய்ததோடு வீரா பலர்க்கு மேலாக இகல் ஏறு
என நின்றனையே என இழித்துரைத்தான்.  வஞ்சித்துக் கொலை செய்த
இராமன், வாலியின் முன்னின்று மறைவதற்குப் பதில், நாணமின்றி நின்றனன்
என இராமனைக்கடிந்துரைத்தான்.                                 96