4033. என்று, தானும் எயிறு பொடிபடத்
தின்று, காந்தி, விழிவழித் தீ உக,
அன்று அவ் வாலி, அனையன சொல்லினான்.
நின்ற வீரன், இனைய நிகழ்த்தினான்:

     என்று - என்று இவ்வாறு; எயிறு பொடிபடத்தின்று - சினத்தால்
பற்கள் பொடியாகும்படிக் கடித்து; காந்தி - சினந்து; விழி வழித் தீ உக -
கண்களின் வழியாகத் தீப்பொறி சிதற; அன்று அவ் வாலி தானும் -
அப்பொழுது அந்த வாலியானவன்; அனையன சொல்லினான் -
(மேற்கூறிய) அத்தன்மையனவான சொற்களைச் சொன்னான்; நின்ற
வீரன் -
(அவற்றைக் கேட்டு) எதிரில் நின்றிருந்த இராமன்; இனைய
நிகழ்த்தினான் -
இத்தகைய வார்த்தைகளைப் (பின்வருமாறு) சொல்லலானான்.

     எயிறு பொடிபடத் தின்று, காந்தி, விழி வழித்தீ உக என்பது வாலியின்
சினத்தை உணர்த்தும் மெய்ப்பாடுகளாகும்.  வீரன் என்ற கவிக் கூற்றால்
இராமன் வீரத்துக்கு இழுக்கு இல்லை என்பதை நுட்பமாகச்சுட்டினார்.     99