4035. | ' ''வானம் ஆள என் தம்முனை வைத்தவன் தானும் மாள, கிளையும் இறத் தடிந்து, யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலென்; ஊனம் ஆன உரை பகர்ந்தீர்'' என, |
என் தம்முனை - (அதைக் கேட்ட சுக்கிரீவன்) என் தமையனான வாலியை; வானம் ஆள வைத்தவன் - விண்ணுலகை ஆளும்படி செய்தவனாகிய மாயாவி; தானும் மாள - தானும் இறந்தொழியும்படியும்; சினையும் இற - (அவன்) சுற்றத்தவர்களும் அழியும்படியும்; தடிந்து - கொன்று; யானும் மாள்வேன் - நானும் இறப்பேன்; இருந்து அரசு ஆள்கிலேன் - (என் தமையன் இறந்த பின்னர் நான் மட்டும்) உயிருடன் இருந்து அரசாட்சி செய்யமாட்டேன்; ஊனம் ஆன உரை - (எனக்குப்) பழி தரும் சொற்களை; பகர்ந்தீர் என - சொன்னீர்கள் என்று கூற. . . . அப்பிலத்தினுள்ளே மாயாவி வாலியைக் கொன்று விட்டான் எனத் தவறாகக் கருதியதால் 'என் தம் முனை வானமாள வைத்தவன்' என்றான். வீரர்கள் புகுவது விண்ணுலகு ஆதலின் 'வானம் ஆள' என்றான். தன் தமையனைக் கொன்றவனைச் சுற்றத்தோடு அழித்துத் தானும் இறப்பதே தனது கருத்து அன்றிப் பகைவனைக் கொல்லும் திறமின்றிப் பழிபயக்கும் இவ்வுடம்பினைத் தாங்கிக் கொண்டு ஆட்சி புரிவதன்று என்பதை 'இருந்து அரசு ஆள்கிலேன்' என்றான். வாலியைக் காணாது வருந்திய சுக்கிரீவைை அரசு ஏற்குமாறு வேண்டுதலும், சுக்கிரீவன் மாயாவியைத் தேடிக் கொன்று தானும் இறப்பதாகக் கூறுதலுமாகிய செய்திகள் 3838, 39, 40 பாடல்களாலும் கூறப் பெற்றமை காண்க. 101 |