4038.'கொல்லல் உற்றனை, உம்பியை;
      கோது அவற்கு
இல்லை என்பது
      உணர்ந்தும், இரங்கலை;
''அல்லல் செய்யல்; உனக்கு
      அபயம்; பிழை
புல்லல்'' என்னவும்,
      புல்லலை, பொங்கினாய்.

     அவற்கு - அந்தச் சுக்கிரீவனிடத்து; கோது இல்லை என்பது
உணர்ந்தும் -
குற்றம் இல்லை என்பதை உணர்ந்த பின்னரும்; உம்பியைக்
கொல்லல் உற்றனை -
உன் தம்பியை நீயே கொல்ல முற்பட்டாய்;
இரங்கலை - 
அவன் மீது இரக்கமும் காட்ட வில்லை.  அல்லல் செய்யல் -
(அவன் உன்னிடம்) 'எனக்குத் துன்பம் செய்ய வேண்டாம்; உனக்கு
அபயம்-
(நான்) உனக்கு அடைக்கலமானேன்; பிழை புல்லல் - என்மேல்
குற்றத்தைச் சுமத்தாதே'; என்னவும் - என்று பலவாறு கூறவும்; புல்லலை
பொங்கினாய் -
அவனை ஏற்றுக் கொள்ளாத சினம் கொண்டாய்.

     தவறு தம்பியிடம் இல்லை என்பதறிந்தும் அவன் மீது இரக்கம் காட்டாது
கொல்ல முற்பட்டது உடன் பிறந்தானை ஆதரிக்கும் கடப்பாட்டிலிருந்து
தவறிய நிலையைக் காட்டுகிறது.  'என்னைக் காப்பாய்' என இரந்த போதும்
பொறுமையைக் காட்ட வேண்டிய வாலி கோபமுற்றான்.  தவறு
செய்யாதவனைத் தண்டிக்க முற்பட்டதும், அபயம் வேண்டியவன் மீது இரககம்
காட்டாமல் சினம் கொண்டதும் வாலி செய்த குற்றங்கள் என இராமன்
உணர்த்தினான்.  இஃது 'என்பால் எப் பிழை கண்டாய்' (4021) என்ற
வாலியின் வினாவிற்கு விடையாகும்.  அவற்கு - உருபு மயக்கம்;செய்யல் -
எதிர்மறை வியங்கோள் வினை முற்று.                             104