4039. 'ஊற்றம் உற்று உடையான்,
      ''உனக்கு ஆர் அமர்
தோற்றும்'' என்று, தொழுது
      உயர் கையனை,
''கூற்றம் உண்ணக் கொடுப்பேன்''
      என்று எண்ணினாய்;
நால் திசைக்கும்
      புறத்தையும் நண்ணினான்.

     ஊற்றம் உற்று உடையான் - வலிமை முழுவதும் நிரம்பப் பெற்று
டையான் ஆயினும்; உனக்கு ஆர் அமர் தோற்றும் - (உன்னோடு போரிடல்
தகுதியன்று எனக் கருதி) 'வெல்லுதற்கரிய போரில் உனக்குத் தோற்றோம்'
(யாம்); என்று தொழுது உயர் கையனை - என்று கூறி (உன்னை) வணங்கி
உயர்த்திக் கூப்பிய கைகளையுடைய சுக்கிரீவனை; கூற்றம் உண்ணக்
கொடுப்பென் -
'யமன் உண்ணும்படிக் கொடுப்பேன்'; என்று எண்ணினாய் -
என்று நினைத்தாய்; நால் திசைக்கும் - (அதனால் அவன் அஞ்சி) நான்கு
திசைகளின்; புறத்தையும் நண்ணினான் - கடை எல்லைகளையும் விரைந்து
அடைபவனானான்.

     தோற்றும் - தன்னைச் சார்ந்தாரையும் உளப்படுத்திப் பன்மையால்
கூறினான்.  உயர்கை - தலைமேல் உயர்த்திக் கூப்பிய கை; கூற்றம் -
தொழிலாகு பெயராய் யமனைக் குறித்தது.  எதிர்க்கும் வலிமையற்றோர்,
பிழைக்க எண்ணின் கை உயர்த்தித் தொழுதல் மரபாகும்.  கை கூப்பித்
தொழுத தம்பியைக் கூற்றுவனுக்குக் கொடுக்க முற்பட்ட வாலியின் செயல்
போர்நெறியில் பழிதரும் இழிசெயலாகும் என இராமன் எடுத்துரைத்தான்
என்க.  ''அழிகுநர் புறக்கொடை அயில் வாளோச்சாக் கழிதறுகண்மை
காதலித்து உரைத்ன்று'' (பு. வெ. மாலை. வஞ்சி. தழிஞ்சி.20) என்ற போர்
அறம் வாலியிடம் இல்லையே என்பது குறிப்பு.  ''பேராண்மை என்பதறுகண்
ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு'' (குறள் - 773) என்ற குறளும்
ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.                                 105